Published : 22 Mar 2023 07:01 PM
Last Updated : 22 Mar 2023 07:01 PM
காஞ்சிபுரம்:"காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தவறு இருந்தால் நிச்சயமாக ஆலை உரிமையாளர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்" என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே உள்ள வளத்தோட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்து காஞ்சிபுரம் மாவட்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருபவர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "இந்த வெடி விபத்தில் 27 பேருக்கு காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போதும் என 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக ஐந்து பெண்கள் 3 ஆணகள் என 8 பேரில் 7 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும், ஒருவர் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு இடங்களில் இதுபோன்ற பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தற்போது இந்த வெடி விபத்து நடந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏழு முதல் எட்டு நபர்கள்தான் வேலை செய்ய வேண்டும். ஆனால், 27 பேர் வேலை செய்துள்ளனர். இது தவறு. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இந்த வெடி விபத்து குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற தவறுகள் மேலும் ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளோம்.
இந்த பட்டாசு ஆலை இயங்க 2024-ம் ஆண்டு வரை அனுமதி பெற்றுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள மற்ற பட்டாசு தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளோம். இந்த ஆய்வின்போது தவறு கண்டறியப்பட்டால் நிச்சயமாக உரியவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT