Published : 22 Mar 2023 03:09 PM
Last Updated : 22 Mar 2023 03:09 PM

பட்டாசு ஆலைகளை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

சென்னை: காஞ்சிபுரம் வெடி ஆலை விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பட்டாசு ஆலைகளை ஒழுங்குபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காஞ்சிபுரம் மாநகர எல்லைக்கு உட்பட்ட குருவிமலை கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. வெடி ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குருவிமலை கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் நாட்டுவெடித் தொழிற்சாலையில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று காலை வெடி மருந்துகள் உரசி பட்டாசு தீப்பிடித்ததால் பெரும் விபத்து ஏற்பட்டது. அந்தக் கொடிய விபத்தில் 3 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பலரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதறி விட்டதால் அவர்களின் விவரங்களை கண்டறிய முடியவில்லை. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் 8 பேரின் நிலைமை கவலையளிக்கும் நிலையில் உள்ளது. அவர்கள் அனைவரும் உயர் மருத்துவத்திற்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அவர்கள் அனைவரும் விரைவில் நலமடைய எனது விருப்பங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். கடுமையான காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நாட்டு வெடி தயாரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் விதிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை; பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவதில்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு வெடி ஆலையில் விபத்துகள் நிகழ்வதும், அதில் உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. இனியும் இத்தகைய நிலை தொடருவதை அனுமதிக்கக் கூடாது.

கிராமப்பகுதிகளில் செயல்பட்டு வரும் வெடி ஆலைகளை கண்காணிக்கவும், அவற்றின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் தனி விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தகைய வெடி ஆலைகளுக்கு பொறுப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். ஏதேனும் விபத்துகள் நடந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியை அரசு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x