Published : 22 Mar 2023 02:58 PM
Last Updated : 22 Mar 2023 02:58 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே புதன்கிழமை காலை நடந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த 7 பெண்கள் உட்பட 16 பேருக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் என்ற பகுதியில் கடந்த இருபதுஆண்டுகளாக பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலைக்கு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை காலை வழக்கம்போல் பணிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. ஆலையில் நடந்த வெடி விபத்தின் சத்தம் சுமார் 5 கி.மீட்டர் அளவுக்கு உணரப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து நிகழ்ந்தபோதே 5 பேர் உடல்சிதறி உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு: பட்டாசு விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இதுவரை இந்த விபத்தில் மொத்தம் 8 பேர் பலியாகியுள்ளனர். மேலும், விபத்தில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் சுதர்சனும் இந்த விபத்தில் பலியாகியுள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பெண்கள் உள்பட 16 தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...