Last Updated : 22 Mar, 2023 03:29 PM

 

Published : 22 Mar 2023 03:29 PM
Last Updated : 22 Mar 2023 03:29 PM

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லாத நிலையுள்ளது: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லாத நிலையுள்ளது. திட்ட தலைவர் தலைமைச் செயலர்தான். ஸ்மார்ட் சிட்டி தொடர்பான கோப்புகள் அரசுக்கு வருவதில்லை. மாநிலம் என்றுதான் சொல்கிறோம் ஆனால் முழு அதிகாரமில்லை என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஸ்மார்ட் சிட்டி பற்றி கேள்வி நேரத்தின் போது வைத்தியநாதன் (காங்): " புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் லாஸ்பேட்டை தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட பணிகள் என்ன? டெண்டர் விடப்பட்டும் காலதாமதம் ஆவது ஏன்? பணிகள் எப்போது தொடங்கப்படும்?" என்று கேள்வி எழுப்பினார்.

முதல்வர் ரங்கசாமி: "லாஸ்பேட்டை தொகுதியில் சுத்திகரிப்பு நிலையம், சாலை மேம்பாடு, எல் வடிவ வாய்க்கால் அமைத்தல், பூங்கா புனரமைப்பு, சலவையாளர் நகர் மேம்பாடு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது" என்று கூறினார்.

அப்போது எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ரமேஷ், சிவசங்கர், ஜான்குமார், நேரு ஆகியோர் எழுந்து, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடங்க காலதாமதம் ஆகிறது. பிற மாநிலங்களில் ஒட்டுமொத்த பணிகளும் முடிவடைந்து விட்டது. நமது மாநிலத்தில் இன்னும் பணிகள் தொடங்கவே இல்லை. இதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

முதல்வர் ரங்கசாமி: "ஸ்மார்ட் சிட்டியில் ஒப்பந்தம் போடுவதில் இருந்து நடைமுறைக்கு பொருந்தாத நிர்வாக நடைமுறை சிக்கல் இருக்கிறது. அதை களைய எண்ணம். ஆனால் அதற்கென தனியாக குழு உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1200 கோடியில் பணிகள் நடந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது ரூ.256 கோடிக்கு கூட பணிகள் நடக்கவில்லை. ஜுன் மாதத்துக்குள் இப்பணிகள் நிறைவடையுமா எனத் தெரியவில்லை என்று கூறினார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. முன்னாள் தலைமைச் செயலர் திட்டத்தை வேகப்படுத்தவில்லை. தற்போதும் பணி விரைவாக இல்லை. விரைவு காட்டாததால் காலதாமதம், விரயம் ஏற்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கும், அரசுக்கும் சம்பந்தம் இல்லாத நிலை உள்ளது. திட்டத்தின் தலைவர் தலைமை செயலாளர்தான். அவர்தான் திட்டத்தை இறுதி செய்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி தொடர்பான கோப்புகள் அரசுக்கு வருவதில்லை. மாநிலம் என்று சொல்கிறோம் ஆனால் முழு அதிகாரம் இல்லாத நிலையில்தான் உள்ளோம். கடந்த காலங்களில் மத்திய அரசு கூடுதலாக 90 சதவீதம் வரை நிதி வழங்கியது. இந்த நிதி படிப்படியாக குறைந்து தற்போது 23 சதவீதத்திற்கு வந்துவிட்டது. இருப்பினும் மாநில அரசின் வருவாயை 61 சதவீதமாக உயர்த்தியுள்ளோம்." என்று முதல்வர் ரங்கசாமி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon