Published : 22 Mar 2023 02:10 PM
Last Updated : 22 Mar 2023 02:10 PM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் நடவு செய்துள்ள சின்ன வெங்காயப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. வெங்காய பூக்களில் இருந்து எடுக்கப்படும் விதைகள் ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் விற்பனையாகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் இரண்டு முறைகளில் சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காயத்தை நடவு செய்து சாகுபடி செய்வது ஒரு வகை. வெங்காய விதைகளை நாற்றாக வளர்த்து, நடவு செய்வது இன்னொரு வகை.இரண்டாவது வகையில் சாகுபடி செய்தால் மகசூல் அதிகம் கிடைக்கும்.
அதனால் கடந்த சில ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காய விதை உற்பத்தியும் வெகுவாக நடைபெற்று வருகிறது. ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிரிட 500 கிலோ வரை விதை வெங்காயம் வாங்க வேண்டும். ஒரு கிலோ விதை வெங்காயம் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் அறுவடை செய்து 45 நாட்கள் ஆன வெங்காயத்தை மட்டுமே பயிரிட முடியும்.
இம்முறையில் செலவு அதிகம். அதே சமயம் ஒரு ஏக்கருக்கு, சின்ன வெங்காய பூக்களில் இருந்து எடுக்கப்படும் விதைகள் ஒன்றரை கிலோ போதுமானது. இந்த வகை விதை ஒரு கிலோ ரூ.3000 முதல் ரூ.4000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் செலவு குறைவு என்பதால் பெரும்பாலான விவசாயிகள் பூவில் இருந்து எடுக்கப்படும் வெங்காய விதைகளை வாங்கி பயிரிட விரும்புகின்றனர். அதனால் வெங்காயப் பூவில் இருந்து எடுக்கப்படும் விதைகளுக்கு மவுசு அதிகம் உள்ளது.
எனவே விவசாயிகள் சின்ன வெங்காயம் விதை உற்பத்தியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது ஒட்டன்சத்திரம் பகுதிகளில் சின்ன வெங்காயப் பூக்களில் பூக்கள் பூத்துக் குலுங்குவது ரம்மியமாக காட்சியளிக்கிறது. ஒரு கிலோ விதை ரூ.3000-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து கேதையுறும்புவை சேர்ந்த விவசாயி பரமேஸ்வரன் கூறியதாவது: விதை வெங்காயம் மூலம் நடவு செய்வதை விட விதை மூலம் வெங்காயம் சாகுபடி செய்யவே விவசாயிகள் விரும்புகின்றனர். அதனால் சின்ன வெங்காய விதைக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது. ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அதிகளவில் சின்ன வெங்காய விதை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT