Published : 18 Sep 2017 06:10 PM
Last Updated : 18 Sep 2017 06:10 PM

தகுதி நீக்க விவகாரம்: உத்தரகாண்ட் தீர்ப்பும், தமிழக நிலவரமும்

18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் பலரும் எடியூரப்பா வழக்கு தீர்ப்பை உதாரணம் காட்டி வந்தாலும், இதே போன்ற விவகாரத்தில் உத்தரகாண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அது குறித்து ஒரு அலசல்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களாக செயல்பட்ட 18 பேரை சட்டப்பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் இதற்கு முன்னர் நடந்த நீதிமன்ற தீர்ப்புகளை பலரும் காரணம் காட்டி பல்வேறு விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனேகம் பேர் கர்நாடக முதல்வர் எடியூரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம் எம்.எல்.ஏக்களை இடை நீக்கம் செய்தது செல்லாது என்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டப்பேரவை தலைவர் தனபாலின் முடிவைப் பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

சிலர் உத்தரகாண்ட் மாநில விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை சிலர் உதாரணம் காட்டுகின்றனர். கர்நாடக மாநில விவகாரம் 2011 ஆம் ஆண்டு நடந்தது. ஆனால் கடந்த ஆண்டு உத்தரகாண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 9 பேர் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் சபாநாயகர் தீர்ப்பு சரி, உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது என்ற வாதம் வைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் இதே போன்றதொரு நிகழ்வு நடந்த பொழுது சபாநாயகர் 9 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் முதல்வர் ஹரீஷ் ராவத்தை மாற்ற வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் 9 எம்.எல்.ஏக்களும் வழக்குத் தொடர்ந்தனர்.

தாங்கள் காங்கிரஸ் கட்சியிலேயே தொடருவதாகவும், முதல்வரை மாற்ற வேண்டும் என்ற தங்களது கோரிக்கை ஜனநாயக மரபுதான் என்றும், தகுதி நீக்கம் செய்தது செல்லாது என அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களது மனுவில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு ஆதரவாக சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளார் என்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதே நேரத்தில் முதல்வர் மீது ஆளுநரிடம் முறையிடச் சென்ற பாஜக எம்எல்ஏக்களுடன் அதிருப்தி எம்எல்ஏக்கள் சென்றது கட்சித் தாவல்தான் என காங்கிரஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதிட்டார்.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி யூ.சி.தியானி தீர்ப்பளித்தார். தகுதி நீக்கத்தை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அத்துடன் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றனர். ஆனால் உச்ச நீதிமன்றம் சபாநாயகர் உத்தரவை ஏற்று உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

ஆனால் இதில் சிறிய வித்தியாசம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜக எம்.எல்.ஏக்களுடன் சென்று மனு அளித்தனர் ஆனால் தினகரன் தரப்பில் அவர்கள் தனி அணியாக இயங்கி வருகின்றனர் என்பது தமிழகத்தில் உள்ளதால் இதை வேறு கோணத்தில் பார்க்கும் நிலையும் வரலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x