Published : 22 Mar 2023 06:20 AM
Last Updated : 22 Mar 2023 06:20 AM
திருச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி மீது தனி அக்கறை கொண்டுள்ளதால், மானியக் கோரிக்கையின்போது திருச்சிக்கு நிறைய திட்டங்கள் கிடைக்கும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழக அரசின் 2023-24-ம் ஆண்டு்க்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் திருச்சி அரசு மருத்துவனையில் ரூ.110 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும், சமயபுரம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் பெருந்திட்ட வளாகம் அமைக்கப்படும், திருச்சி மாநகராட்சி பொது இடங்களில் வைபை வசதி ஏற்படுத்தித் தரப்படும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நவீன விடுதி கட்டித் தரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
திண்டாடும் திருச்சி ‘ஹேஷ்டேக்’ - எனினும் இந்த பட்ஜெட்டில் சென்னை, மதுரை, கோவை, சேலம் ஆகிய மாநகரங்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், மாநிலத்தின் மையப் பகுதியிலுள்ள திருச்சிக்கு அளிக்கப்படவில்லை என திருச்சி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக ‘திண்டாடும் திருச்சி' என்ற ஹேஷ்டேக்குடன் டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்களது மனக்குமுறல்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்' நாளிதழிலும் நேற்று செய்தி வெளியானது. இதேபோல, மத்திய மண்டலத்துக்குட்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் திருச்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் குரல் எழுப்பினர்.
முதல்வர் தனி அக்கறை: இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ‘இந்து தமிழ்' நாளிதழிடம் நேற்று கூறியது: திருச்சியின் வளர்ச்சி மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி அக்கறை கொண்டுள்ளார். சென்னைக்கு அடுத்த பெருநகரமாக திருச்சியை உருவாக்க வேண்டுமென எங்களிடம் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.
எனவேதான், வேறு எங்கும் இல்லாத அளவுக்கு கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.1,000 கோடிக்கும் மேலான திட்டங்களை திருச்சிக்கு அளித்துள்ளார். அவற்றில் பெரும்பாலான திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரக்கூடிய நாட்களில் இன்னும் ஏராளமான திட்டங்கள் திருச்சிக்கு கொண்டு வரப்பட உள்ளன.
இந்த பட்ஜெட் அறிவிப்பில் திருச்சிக்கான பெரிய திட்டங்கள் ஏதுமில்லை என நினைக்க வேண்டாம். அடுத்ததாக வரக்கூடிய மானியக் கோரிக்கையின்போது, பல்வேறு அரசுத் துறைகள் சார்ந்து திருச்சிக்கு நிறையத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளிப்பார். அதற்கான அறிவிப்புகள் வரும். பொறுத்திருந்து பாருங்கள்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த ஆட்சியில் திருச்சி மாவட்டம் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களைப் பெற்று வருகிறது. அது தொடரும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT