Published : 21 Mar 2023 07:04 PM
Last Updated : 21 Mar 2023 07:04 PM
சேலம்: ''ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சியைக் கண்டு திருமாவளவன் அச்சப்படுகிறார்'' என ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாநிலத் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஆர்எஸ்எஸ் அகில பாரத பொதுக்குழு கூட்டம் ஹரியாணாவில் நடைபெற்றது குறித்தும் சேலத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சிகள் குறித்தும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய திட்டங்கள் பற்றி நடந்த விவாத கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் மாநிலத் தலைவர் குமாரசாமி பங்கேற்றார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஆன்லைன் மூலமாக நாடு முழுவதிலும் இருந்து 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் 4,848 பேர் சேர்ந்துள்ளனர்.
இந்தப் புதிய உறுப்பினர் சேர்க்கை மூலம் ஆர்எஸ்எஸ் இயக்கம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணியை தமிழ்நாட்டில் நடத்தக் கூடாது என ஒரு சில இந்து விரோத சக்திகள் தூண்டுதலின் பேரில் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்.
மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரி வித்யாலயா பள்ளி ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவையை தரக்கூடிய கல்வி சேவையை, தமிழகத்தில் வரவிடாமல் தடுத்து வருகின்றனர். இதற்கு முழு பொறுப்பு தமிழக அரசு தான்.
ஆர்எஸ்எஸ் இயக்கம் தற்போது அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள், முஸ்லிம் மதத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வளர்ச்சியைக் கண்டு திருமாவளவன் அச்சப்படுகிறார். விரைவில் நாங்கள் திருமாவளவனை சந்தித்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பற்றி அவரிடம் தெளிவுபடுத்தவுள்ளோம்'' என்று அவர் கூறினார். உடன் மாநில ஊடக பிரிவு துறை நரசிம்மன், சேலம் மாவட்ட ஆர்எஸ்எஸ் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டர் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT