Last Updated : 21 Mar, 2023 05:14 PM

 

Published : 21 Mar 2023 05:14 PM
Last Updated : 21 Mar 2023 05:14 PM

“புதுச்சேரியில் கழிவுநீர் கால்வாய்களை மூட முடியாதா? - அமைச்சரிடம் கேள்வி கேட்ட மாணவி

புதுச்சேரி: “ஏழைகள் கேள்வி கேட்டால் அரசு பதில் தரும் என்பதை அறிந்தோம்” என்று புதுச்சேரி பேரவை நிகழ்வுகளை பார்த்த பின்பு கல்வியமைச்சரிடம் கேள்விகளை எழுப்பிய பள்ளி மாணவிகள் குறிப்பிட்டனர்.

புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகளை பள்ளி மாணவிகள் தினந்தோறும் பார்வையிட்டு வருகின்றனர். சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்வையிட்ட பின்பு இன்று கல்வியமைச்சர் நமச்சிவாயத்தை மாணவிகள் சந்தித்து கேள்வி எழுப்பினர். அப்போது மாணவிகள் கேள்விக்கு பதில் தந்தார். மாணவி ஒருவர், "புதுச்சேரியில் திறந்ததுள்ள கழிவுநீர் கால்வாய்களை மூட முடியாதா?" என்று கேட்டார். அதற்கு அமைச்சர், "நிதி இல்லை. திட்டத்தை பாதிக்காமல் ஒவ்வொரு பகுதியாக திறந்தவெளி கால்வாயை மூடி வருகிறோம். குறிப்பிட்ட நிதி ஒதுக்கி செய்கிறோம். படிப்படியாக செய்கிறோம்" என கூறினார்.

அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி போதியளவு இல்லையே என்ற மாணவியின் கேள்விக்கு, "இதுபோல் பிரச்சினை ஏதும் இல்லை. அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனை இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் கூடுதல் வசதி ஏற்படுத்தப்படும். அதிக நிதி சுகாதாரத்துறை, கல்விக்கும் ஒதுக்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் 1600 கோடி கல்விக்கு ஒதுக்கியுள்ளோம். 60 சதவீதம் ஊதியத்துக்கு செல்கிறது. நல்வாழ்வு திட்டம் முதியோர் ஓய்வூதியம், சைக்கிள் தருவது, சீருடை தருவது ஆகியவை வரும். மேம்பாட்டுத் திட்டங்களான சாலை வசதி, கழிப்பிட வசதி, பள்ளி கட்டுவது உள்கட்டமைப்பு வசதி இதில் வரும் என கூறினார்.

ஏன் 8-ம் வகுப்பு வரை மட்டுமே விடுமுறை விட்டீர்கள் என்று மாணவி ஒருவர் கேட்டதற்கு, "குழந்தைகளுக்குதான் அதிகளவில் வைரஸ் காய்ச்சல் பரவியது. அதனால்தான் விடுமுறை விட்டோம். இதர வகுப்புகளுக்கு தற்போது தேர்வுகள் நடக்கிறது. சுகாதாரத் துறை அறிவுறுத்தல்படி விடுமுறை 8ம் வகுப்பு வரை விடப்பட்டது" என்றார்.

கொசு பிரச்சினை அதிகரித்துள்ளதே என்று மாணவி கேட்டதற்கு, "கொசுக்கு மருந்து அடிக்கிறோம். அதே நேரத்தில் அடிக்கடி கொசு மருந்தும் அடிக்கக் கூடாது. சிலர் மூச்சு திணறல் வரும் என்கிறார்கள். நாமும் சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்" என கூறினார்.

போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதே என்று மாணவி ஒருவர் கேட்டதற்கு, "முன்பு 8 லட்சம் பேர்தான் புதுச்சேரியில் இருந்தனர். தற்போது வெளியூரில் இருந்து குடியேறிவர்கள் என 16 லட்சம் பேர் ஆகிவிட்டனர். தற்போது வாகனங்கள் அதிகரித்துள்ளது. அதனால் நெரிசல் அதிகரித்துள்ளது. காவல்துறையினர் எண்ணிக்கையும் அந்தளவுக்கு இல்லை.

அந்த மக்கள் தொகைக்கு ஏற்பதான் போலீஸார் எண்ணிக்கை இருந்தது. தற்போது 1000 போலீஸார் எடுக்க உள்ளோம். சாலையை அகலப்படுத்தி 37 சிக்னல்களை அமைக்கவுள்ளோம். டெண்டர் வைத்துள்ளோம். மேம்பாலம் அமைப்பது, போக்குவரத்து நெரிசல் நேரத்தில் போலீஸார் நியமிக்கவுள்ளோம். படிப்படியாக சரி செய்வோம்" என கூறினார்.

நீர் அசுத்தமாவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று மாணவி கேட்டதற்கு, "கடல் நீர் உட்புகுவதால் தண்ணீர் பயன்பாட்டுக்கு உகந்ததில் இருந்து குறைகிறது. மழைநீர் சேகரிப்பு ஒரே வழி. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், ஏரி, குளம் தூர்வாரி தண்ணீர் மாசுபடுதலை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்" என கூறினார்.

சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்த்த பின்னர் மாணவிகள் கூறுகையில், "சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பார்த்தபோது ஏழைகள் கேள்வி கேட்டால் அரசு பதில் சொல்லும் என்பதை அறிந்தோம். முக்கியமாக மக்களின் பிரதிநிதிகள் மக்கள் பிரச்சினைகளை தெரிவித்து அரசு மூலம் நடவடிக்கை எடுப்பதை புரிந்துகொண்டோம்" என கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x