Published : 21 Mar 2023 01:10 PM
Last Updated : 21 Mar 2023 01:10 PM
சென்னை: விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக இந்த வேளாண்மை பட்ஜெட் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) செய்தியாளர்களை சந்திதார். அப்போது பேசிய அவர், "வேளாண் பெருமக்களுக்கு பெரிய திட்டங்கள் உள்ளது. பல துறைகளைச் சேர்த்து 2 மணி நேர பட்ஜெட்டை அமைச்சர் வாசித்து உள்ளார். ஆனால் வேளாண் பெருமக்களுக்கு முக்கியமாக கிடைக்க வேண்டிய நன்மைகள் இதில் இல்லை. கரும்புக்கு ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி நிலை அறிக்கையில் வெறும் ரூ.195 தான் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய ஏமாற்று வேலை.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். இதைப் பற்றிய அறிவிப்பு இல்லை. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் ரகங்களை பிரித்து ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டுமே ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது விவசாயிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்த வேளாண் நிதி நிலை அறிக்கை வேளாண் மக்களுக்கு பெரிய ஏமாற்றம் அளிக்கும் அறிக்கையாக உள்ளது. விவசாயிகளை ஏமாற்றும் அரசாக தான் இந்த அரசை விவசாயிகள் பார்க்கிறார்கள். பயிர் காப்பீட்டு திட்டத்தில் இந்தியாவில் அதிக அளவு இழப்பீட்டு தொகை பெற்று தந்த அரசு அதிமுக அரசு. வறட்சி வந்த போது இழப்பீட்டு தொகையை அதிகமாக வழங்கிய அரசும் அதிமுக அரசு தான்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, வெள்ளதால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.13,500 தான் இழப்பீடு வழங்கப்பட்டது. விவசாயிகள் கோரிக்கை வைத்தும் கூட முறையான கணக்கீடு செய்யவில்லை. எனது ஆட்சியில் இழப்பீட்டு தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. காப்பீட்டுக்கான ப்ரீமியம் தொகையை பெற முடியாத அவல நிலை தான் இந்த ஆட்சியில் உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த நெல் மூட்டைகள் சேதம் அடைந்தது. இதை எல்லாம் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. நெல் மூட்டைகளை பாதுகாக்க தேவையான தார்ப் பாய்களை கூட இந்த அரசு செய்யவில்லை.
பொங்கல் பரிசில் இந்த அரசு முதலில் கரும்பை சேர்க்கவில்லை. இதற்கு எதிராக நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். மேலும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதை விளைவாக தான் இந்த அரசு கரும்பை பொங்கல் தொகுப்பில் வழங்கியது. குடிமராமத்து திட்டம், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு இந்த அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த பட்ஜெட்டில் வேளாண் மக்களின் நலனுக்கு எந்த வித புதிய திட்டமும் இல்லை. இந்த அரசு விவசாயிகளின் வாழ்க்கையில் கண்ணாம்மூச்சி விளையாடும் அரசாக உள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT