Published : 21 Mar 2023 12:08 PM
Last Updated : 21 Mar 2023 12:08 PM
சென்னை: வணிகர்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள், தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து இன்னும் விரிவான பட்ஜெட் ஒதுக்கீடு இருந்திருந்தால் வணிகர்களுக்கு மகிழ்ச்சிக் குரியதாக இருக்கும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேரமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழக அரசின் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்திருப்பது வரவேற்புக்குரியது. ஆனாலும், 13 லட்சம் அரசு ஊழியர்களைக் கொண்டுள்ள தமிழக பட்ஜெட்டில். ஏறத்தாழ அரசு ஊழியர்களுக்கான ஊதியமும், ஓய்வூதியமும் 1.11 லட்சம் கோடி ரூபாய் என்பது பட்ஜெட் தொகையில் மிகப்பெரும் தொகையாகும்.
அதைப் போலவே நிலுவைத் தொகைக்கான வட்டி 46.727 ஆயிரம் கோடி ரூபாய் இவை இரண்டுமே 7 கோடி மக்களை கொண்டுள்ள தமிழக மக்களின் ஒரு ஆண்டிற்கான பட்ஜெட் தொகையில் 50 சதவிகிதத்திற்கு மேல், செலவினங்களாக இருக்கின்ற நிலையில், வளர்ச்சிக்கான திட்டங்கள் மிகவும் குறைந்த அளவே மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
மகளிருக்கான உரிமைத் தொகை தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் மாதத்திலிருந்து 1000 ரூபாய் என அறிவித்திருப்பதும், ஆரம்பப் பள்ளி மாணவர்களின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கின்றது.
விவசாயிகளின் 2,200 கோடி ரூபாய் விவசாய கடன்களை ரத்து செய்திட ஒதுக்கியிருப்பதும் வரவேற்புக்குரியது. மாநில வருவாய்க்கு அடிப்படை ஆதாரமாய் இருக்கும் வணிகர்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள், தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து இன்னும் விரிவான பட்ஜெட் ஒதுக்கீடு இருந்திருந்தால் அது வணிகர்களுக்கு மகிழ்ச்சிக் குரியதாக இருக்கும். என பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏஎம் விக்கிரம ராஜா தெரிவித்தார்" என்று கோவிந்த ராஜுலு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT