Published : 21 Mar 2023 09:35 AM
Last Updated : 21 Mar 2023 09:35 AM

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் | கருணாநிதி நினைவிடத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் மரியாதை

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 இன்று (மார்ச் 21) தாக்கல் செய்யப்படுகிறது. சரியாக காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் அறிக்கையை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சட்டப்பேரவைக்கு சென்றடைந்தார். இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும்.

இந்த வேளாண் பட்ஜெட்டில் புதிய வேளாண் கல்லூரிகள் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சிறு தானிய உற்பத்திக்கு முக்கியத்துவம் தரக்கூடிய புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேளாண் பட்ஜெட் தாக்கலாவதை ஒட்டி பல்வேறு விவசாயிகள் சங்கமும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. குறிப்பாக கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும். நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.4000 வழங்க வேண்டும். பாசனக் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும். பயிர்க் காப்பீடு திட்டங்களை இன்னும் திறம்பட செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது ஒருபுறம் இருக்க பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கடந்த 4 நாட்களாக பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 21 வரை கூட்டத்தொடர்: தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை உகாதியை முன்னிட்டு விடுமுறை என்பதால் 23, 24 மற்றும் 27, 28-ம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீது விவாதம் நடத்தப்பட்டு அமைச்சர்கள் பதில் உரை அளிப்பார்கள். அத்துடன் விவாதம் முடிவுறும். தொடர்ந்து மார்ச் 29-ம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கி, ஏப்.21-ம் தேதி வரை நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x