Published : 21 Mar 2023 04:20 AM
Last Updated : 21 Mar 2023 04:20 AM
சென்னை: வரும் நிதியாண்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.50 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தமிழக நிதித் துறைச் செயலர் நா.முருகானந்தம் கூறினார்.
தமிழக பட்ஜெட் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மொத்தம் ரூ.3,65,321 கோடியில் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் வருவாய் வருமாண்டில் 10.2 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கிறோம். முத்திரைத் தீர்வை, மாநில ஜிஎஸ்டி உள்ளிட்டவை 19.3 சதவீதம் உயரும்.
ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.20 ஆயிரம் கோடி வரை வந்து கொண்டிருந்தது. கடந்த ஜூன் மாதத்துடன் அது நின்றுவிட்டதால், நடப்பாண்டில் மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் குறைந்துவிட்டது. வருமாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி குறையும். இருப்பினும் வருவாய் 10.2 சதவீதம் உயர வாய்ப்புள்ளது.
பட்ஜெட்டைப் பொறுத்தவரை, வருவாய்ப் பற்றாக்குறையை தொடர்ந்து குறைத்து வருகிறோம். வருவாய்ப் பற்றாக்குறையே இல்லாத நிலை இருக்க வேண்டும். 2020-21-ல் உச்சநிலையாக ரூ.62 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. 2021-22-ல் ரூ.46,538 கோடியாக குறைக்கப்பட்டது. நடப்பாண்டு ரூ.30,476 கோடி வருவாய்ப் பற்றாக்குறை இருக்கும் என்று கணக்கிட்டுள்ளோம். இது நல்ல முன்னேற்றம். கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.16 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதம் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு இந்த ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில், திறன்வளர்ப்பு, வேலைவாய்ப்பு, தொழில் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ரூ.2,700 கோடியில்ஐடிஐ-க்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது ரூ.2,800 கோடியில், 54 பாலிடெக்னிக் கல்லூரிகளை மேம்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்காக உலகத் திறன் மையம் அமைக்கப்பட உள்ளது.
இதேபோல, கட்டமைப்பு வசதிகள், தொழில் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கோவை, மதுரைக்கு மெட்ரோ திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழில் பூங்காக்கள், விருதுநகர், சேலத்தில் ஜவுளிப் பூங்காக்கள், ஈரோடு, செங்கல்பட்டு உள்ளிட்ட 3 இடங்களில் தொழில்நுட்பப் பூங்காக்கள், இணையவசதி, இலவச வைஃபை, ரூ.1,000 கோடியில் வடசென்னை வளர்ச்சித் திட்டம், 50 வட்டாரங்களில் முதலீட்டுத் திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நலிவுற்றவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, மகளிர் உரிமைத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சியின் அடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்குமான நல்ல திட்டங்களை வழங்கும்பட்ஜெட்டாக உருவாக்கப்பட்டுள்ளது. பதிவுக் கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
வரும் நிதியாண்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.50 ஆயிரம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும் டாஸ்மாக் மூலம்நடப்பாண்டில் ரூ.45 ஆயிரம் கோடியும், கடந்த ஆண்டில் ரூ.36 ஆயிரம் கோடியும் கிடைத்துள்ளது.
ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.4,500 கோடி: நீர்வளத் துறைக்கு ரூ. 8,632 கோடி, சுற்றுலாத் துறைக்கு ரூ.355 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.4,500 கோடி வரவேண்டியுள்ளது. மேலும், உணவுத் துறைக்கு ரூ.4,000 கோடி வர வேண்டியுள்ளது.
வரி வருவாய் அதிகரிப்பு மற்றும் செலவுகளைக் குறைத்ததன் மூலம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.முத்திரைக் கட்டணம் குறைப்பு, வழிகாட்டி மதிப்பு அதிகரிப்பு ஆகியவை ரியல் எஸ்டேட் துறையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பதிவுகள் அதிகரிப்பால் ரூ.2,000 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருவாய்ப் பற்றாக்குறையை ஈடுகட்ட, ஜிஎஸ்டி, முத்திரைக் கட்டணம் போன்றவற்றில் கவனம்செலுத்தி வருகிறோம். அடுத்த ஆண்டில் 20 சதவீத வளர்ச்சி இருக்கும். இந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மூலம் ரூ.23,486 கோடி கிடைத்துள்ளது. வருமாண்டில் இது ரூ.26,304 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
மாநில அரசின் கடன் அளவு ரூ.84 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. தமிழகம் ரூ.75 ஆயிரம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். இந்த ஆண்டு ரூ.72 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளோம். இம்மாத இறுதிக்குள் ரூ.3 ஆயிரம் கோடி வாங்குவோம்.
அரசின் செலவுகள் குறைக்கப்படவில்லை. அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தங்கள், திறன் மேம்பாடு மூலம் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT