Published : 21 Mar 2023 03:04 AM
Last Updated : 21 Mar 2023 03:04 AM
அரசுக் கல்லூரிகளில் ரூ.1,000 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட இருப்பதாகவும் ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் 1,000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் அரசுக் கல்லூரிகளில் ரூ.1,000 கோடி செலவில் உள்கட்டமைப்பு வசதிகள் 5 ஆண்டுகளில் மேம்படுத்தப்பட உள்ளன.
நடப்பு ஆண்டில் 25 பாலிடெக்னிக் கல்லூரிகள், 55 கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுதல், ஆய்வகங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் வரும் நிதி ஆண்டிலும் ரூ.200 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். மொத்தமாக, பட்ஜெட்டில் உயர்கல்வித் துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வில் (ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு) தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இப்போக்கை மாற்றியமைக்க சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் மாணவர்களுக்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கும் திட்டத்தை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் செயல்படுத்தும்.
ஆண்டுதோறும் மதிப்பீட்டுத்தேர்வு மூலம் 1,000 மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவர். அவர்கள் முதல்நிலைத்தேர்வுக்கு தயாராவதற்கு மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்துக்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு - கருணைத் தொகை ரூ.40 லட்சமாக உயர்வு: உயிர்த் தியாகம் செய்த, தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசால் வழங்கப்படும் கருணைத் தொகை ரூ.20 லட்சத்திலிருந்து இரு மடங்காக உயர்த்தி ரூ.40 லட்சமாக வழங்கப்படும். வீரதீரச் செயல்களுக்கான உயர் விருதுகளைப் பெறும் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையும் 4 மடங்காக உயர்த்தி வழங்கப்படும்.
இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இந்த கோரிக்கை நிறைவேறும் வரையில், பாதுகாப்பான, தரமான தங்குமிடங்களை வழங்கும் நோக்கத்துடன் மறுவாழ்வு முகாம்களில் 7,469 புதிய வீடுகள் கட்டப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.
முதல்கட்டமாக 3,510 வீடுகளுக்கான பணிகள் ரூ.176 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 3,959 வீடுகளைக் கட்ட வரும் நிதியாண்டில் ரூ.223 கோடியை தமிழக அரசு வழங்கும்.
சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.5,346 கோடி ஒதுக்கீடு: முதல்வரின் முகவரி திட்டத்தில் இந்தாண்டு பெறப்பட்ட 17.7 லட்சம் மனுக்களில், 17.3 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், கள ஆய்வில் முதல்வர் என்ற புதிய திட்டத்தில், பல்வேறு மாவட்டங்களுக்கு முதல்வர் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொள்கிறார். இதன் அடுத்த கட்டமாக அரசின் திட்டங்களையும் சேவைகளையும் கடைக்கோடி மக்களும் பெற்றுப் பயனடையும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும், நகர்ப்புறப் பகுதிகளிலும் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும், எளிய நிலப்பதிவேட்டு முறை கொண்டு வரப்படும். அங்கீகரிக்கப்பட்ட நிலங்கள் விற்பனை பதிவு செய்யப்பட்டவுடன், அவற்றிற்கான பட்டாவை தடையின்றி மாற்றம் செய்வதற்காக, புதிய மென்பொருள் உருவாக்கப்படும். இந்நிதியாண்டில் கிராம நத்தப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு நத்தம் நிலங்களுக்கான பட்டா மாற்றும் முறை இணையவழியில் மேற்கொள்ளப்படும்.
மே 2021 முதல் புதிதாக 5,76,725 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர, பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியான ஒரு லட்சம் பேருக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும். இதன்மூலம் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் மொத்த எண்ணிக்கை 35.8 லட்சமாக உயரும். அந்தவகையில், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக ரூ.5,346 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து காவல் நிலையங்களிலும் ரூ.38.25 கோடியில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும். வடமாநிலத்தவர்கள் குறித்து சமூக ஊடங்களில் தவறான செய்தியை பரப்பிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT