Published : 21 Mar 2023 03:10 AM
Last Updated : 21 Mar 2023 03:10 AM

தமிழக பட்ஜெட் 2023-2024: மேலும் 8 நகரங்களில் சங்கமம் கலை விழா - தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம்

தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். அம்பேத்கர் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். மேலும் 8 நகரங்களில் சங்கமம் கலை விழா விரிவுபடுத்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:

தாய் தமிழைக் காக்க, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோரின் பங்களிப்பை போற்றும் வகையில் சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும். அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக, அவரது படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும். இதற்காக அரசால் ரூ.5 கோடி மானியமாக வழங்கப்படும்.

தொழில்நுட்பத் துறையில் தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் தமிழ் மொழி உலக மொழியாக வளர்வதற்கு, புகழ்பெற்ற வல்லுநர்களைக் கொண்டு ‘தமிழ்க் கணினி பன்னாட்டு மாநாடு’ நடத்தப்படும். தமிழ் மொழியில் பெருமளவில் மென்பொருள்கள் உருவாக்கப்படுவதை இது ஊக்குவிக்கும்.

தமிழ் பண்பாட்டுத் தலங்களை இணைக்க தமிழ்ப் பண்பாட்டுக் கடல்வழிப் பயணங்கள் ஊக்குவிக்கப்படும். இந்த பயணங்கள், நம் இனத்தின் செம்மையான வரலாறு, இலக்கியம், கலை, பண்பாடு, கைவினைப்பொருட்கள், உணவு வகைகளை வெளிக்கொணர்வதோடு, தமிழகத்தின் புகழை எட்டுத்திக்கும் பரப்பும்.

நமது தாய்மொழிக்கு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை கருதி, வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை அரசு வழங்கி வருகிறது. வரும் ஆண்டில் மேலும் 591 வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு இச்சலுகையை அரசு வழங்கும்.

சென்னையில் அனைத்துத் தரப்பு மக்களின் வரவேற்பை பெற்றுள்ள சங்கமம் கலை விழா, வரும் ஆண்டில் மேலும் 8 முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதற்காக இந்த பட்ஜெட்டில் ரூ.11 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும், இப்பண்பாடு வருங்காலங்களில் தொடர்ந்து செழித்தோங்கவும், மாநிலம் முழுவதும் 25 பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

உலகாண்ட சோழர்களின் பங்களிப்பை போற்றவும், அக்கால கலைப்பொருட்கள், நினைவுச்சின்னங்களைப் பாதுகாக்கவும், தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோவையில் ரூ.410 கோடியில் தொழில் பூங்காக்கள்: தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அரசு முனைப்புடன் உள்ளது. பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தோல் அல்லாத காலணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அரசு சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது. இத்தொழிற்சாலைகள், ஏற்கெனவே செய்யாறு, பர்கூர் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன.

திண்டிவனத்தில் 5,400 பெண்களுக்கும், பெரம்பலூரில் 31,600 பெண்களுக்கும் வேலைவாய்ப்பு தரக்கூடிய 2 தொழிற்சாலைகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும், 2 புதிய தொழிற்சாலைகள் ராணிப்பேட்டையிலும், கள்ளக்குறிச்சியிலும் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் 32,000 பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்.

எத்தனால் கொள்கை விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதுடன், சர்க்கரை ஆலைகளின் நிதி நிலையையும் மேம்படுத்தும். எத்தனால் உற்பத்திக்காக ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்க இக்கொள்கை வழிவகுக்கும்.

விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் ரூ.410 கோடியில் அமைக்கப்படும். இதனால், சுமார் 22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ.50 கோடியில் 1,500 பணியாளர்கள் தங்கும் வசதிகளுடன் தொழிலாளர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x