Published : 21 Mar 2023 03:00 AM
Last Updated : 21 Mar 2023 03:00 AM
சென்னை: தமிழகத்தில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பை கடந்த 2017-ம் ஆண்டில் இருந்தபடி மீண்டும் 33 சதவீதமாக உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தை 2 சதவீதமாக குறைக்கவும் அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு கடந்த 2012 ஏப்.1-ம் தேதி உயர்த்தப்பட்ட நிலையில், 2017 ஜூன் 9-ம் தேதி முதல் ஒரே சீராக33 சதவீதம் குறைக்கப்பட்டது. மேலும், விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்பஉறுப்பினர்களுக்கு இடையில் இல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
சந்தை மதிப்புக்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தை குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இதை ஏற்று, வழிகாட்டி மதிப்பில் திருத்தங்களை பரிந்துரைக்க அரசு ஒரு குழு அமைத்துள்ளது. இந்த குழு நில அளவை எண் வாரியாக திருத்தம் மேற்கொள்ள அவகாசம் தேவைப்படும். வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், இக்குழுவின் அறிக்கை பெறப்படும் வரை, வழிகாட்டி மதிப்பை, கடந்த 2017 ஜூன் 8-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்புக்கு ஈடாக உயர்த்த அரசு முடிவெடுத்துள்ளது.
நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க, பதிவுக் கட்டணத்தை 4 சதவீதத்தில் இருந்து2 சதவீதமாக குறைக்கவும் அரசு முடிவெடுத்துள்ளது. இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு கடந்த 2017 ஜூன் 8-ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இல்லாத ஏற்பாடு ஆவணத்துக்கு 7 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். நடுத்தர மக்கள், குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குவோருக்கு இது பெரிதும் பயனளிக்கும்.
காலை உணவு திட்ட விரிவாக்கத்துக்கு ரூ.500 கோடி: முதல்வரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்துக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் காலை உணவுத் திட்டம் 1,937 பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 1.48 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை 10 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள 30,122 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயன் அடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்துக்காக வரும் நிதியாண்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெண் தொழில்முனைவோர் தேவையான கடன்களை உரிய நேரத்தில் பெறுவதிலும், பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் தொடர்ந்து இடர்பாடுகளை சந்திக்கின்றனர். இச்சவால்களை எதிர்கொள்ள பெண்களுக்கென சிறப்பு புத்தொழில் இயக்கம் தொடங்கப்படும். பெண் தொழில்முனைவோர் புத்தொழில்களை தொடங்குவதற்கு அனைத்து வகையிலும் இந்த இயக்கம் உதவும்.
அரசு நிறைவேற்றியுள்ள விவசாயக் கடன் தள்ளுபடிக்கு ரூ.2,393 கோடி, நகைக் கடன் தள்ளுபடிக்கு ரூ.1.000 கோடி, சுயஉதவிக் குழு கடன்களை தள்ளுபடி செய்வதற்கு ரூ.600 கோடி என மொத்தம் ரூ.3,993 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது விநியோக திட்டத்தில் உணவு மானியத்துக்காக ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடுகளில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு ரூ.16,262 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT