Published : 21 Mar 2023 04:03 AM
Last Updated : 21 Mar 2023 04:03 AM

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 - பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் | முழு விவரம்

சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்.15-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால் வருவாய் பற்றாக்குறை கடந்த 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் 2023-24-ம்நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதி, நிர்வாக நலனை கருத்தில் கொண்டு பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், சமூக நலன், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டு பல நலத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. பொருளாதார வளர்ச்சியை உயர்த்துதல், சமூக பாதுகாப்பை வலுப்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி மூலம் பெண்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இவை அனைத்திலும் இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை கண்டுள்ளோம்.

சமூக நீதி, பெண்களுக்கு சமஉரிமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பகுத்தறிவு ஆகிய 4 அடிப்படை தத்துவங்களைக் கொண்டு, நாட்டுக்கே கலங்கரை விளக்கமாக தமிழகம் திகழ்கிறது.

மகளிர் நலனில் அக்கறை: சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தை சரிநிகர் சமமாக உயர்த்த அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. கல்வி, நிர்வாகத்தில், அதிகாரம் மிக்க பொறுப்புகளில், பொருளாதாரத்தில், சமூகத்தில் பெண்களை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மகளிருக்கு சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடும் அளித்தது முதல், அவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கியது வரை மகளிர் நலன் காத்து, அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம்.

அந்த வரிசையில், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. மக்களைத்தேடி மருத்துவம், புதுமைப்பெண், நான் முதல்வன் என தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத திட்டங்களை செயல்படுத்தியுள்ள முதல்வர் ஸ்டாலின், மகளிருக்கு உரிமைத் தொகை தரப்படும் என்ற வாக்குறுதியையும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார்.

அதன் அடிப்படையில், தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதி ஆண்டில் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. மத்திய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலை மற்றும் விலைவாசியால் அதிகரிக்கும் குடும்பச் செலவுகளால் குடும்பத்தலைவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு மாதம் ரூ.1,000 என்பது பேருதவியாக இருக்கும்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதமான செப்டம்பரில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான 15-ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும். இந்த திட்டத்தில் மகளிர் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.

தமிழக பெண்களின் சமூக பொருளாதார வாழ்வில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் இத்திட்டத்துக்காக இந்த பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிக பொருளாதார வளர்ச்சி: வரலாறு காணாத பணவீக்கம், உக்ரைனில் தொடரும் போர், உலக பொருளாதாரம், நிதிச் சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற சூழல் போன்ற சவால்களை, வரும் நிதி ஆண்டில் எதிர்நோக்கியுள்ளோம். தேசிய அளவுடன் ஒப்பிடும்போது, மாநிலத்தில் கடந்த ஆண்டு அதிக பொருளாதார வளர்ச்சியை அடைந்ததுடன், வருவாய், நிதி பற்றாக்குறைகளையும் மத்திய அரசைவிட கணிசமாக குறைத்துள்ளோம்.

கடந்த 2 ஆண்டுகளாக அதிக செலவுள்ள பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், இதுவரை இல்லாத அளவில் பல கடினமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், நாங்கள் பதவியேற்கும்போது ரூ.62 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறையை நடப்பு ஆண்டுக்கான திருத்த மதிப்பீடுகளில் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு குறைத்துள்ளோம். இது கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய 2019-20-ம் ஆண்டின் பற்றாக்குறையை விடவும் ரூ.5,000 கோடி குறைவு. இது வரும் ஆண்டுகளில் படிப்படியாக குறைக்கப்படும்.

வரி வருவாய் அதிகரிப்பு: தமிழகத்தின் சொந்த வரி வருவாய் கடந்த 2011 முதல் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து, 2020-21-ல்5.58 சதவீதமாக இருந்தது.

கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முயற்சிகளால் தற்போது 6.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதை மேலும் உயர்த்தி, நலத் திட்டங்களுக்கான வருவாய் ஆதாரங்களை ஈட்ட முனைப்புடன் செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிமுக வெளிநடப்பு: முன்னதாக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாழ்த்து பெற்றார். பின்னர், பட்ஜெட் தாக்கலுக்காக முதல்வருடன் அவர் காலை 9.56 மணிக்கு சட்டப்பேரவைக்குள் வந்தார். 10 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார்.

அப்போது, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி எழுந்து பேச வாய்ப்பு கேட்டார். பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாய்ப்பு அளிக்காததால், அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். 10.04 மணிக்கு பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பட்ஜெட் சிறப்பம்சங்கள்

> நில வழிகாட்டி மதிப்பு 33% உயர்கிறது

> பதிவுக் கட்டணத்தை 2% ஆக குறைக்க முடிவு

> கல்வித் துறைக்கு ரூ.47,266 கோடி ஒதுக்கீடு

> 1 லட்சம் பேருக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம்

> மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்

> சென்னையில் அதிநவீன விளையாட்டு நகரம்

> 18 லட்சம் மாணவருக்கு காலை உணவு திட்டம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x