Published : 21 Mar 2023 05:48 AM
Last Updated : 21 Mar 2023 05:48 AM

எழில்மிகு கோவை, மாமதுரை ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம்

சென்னை: மாநகரங்களான கோவை, மதுரையை மேம்படுத்த எழில்மிகு கோவை, மாமதுரை ஆகிய ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரங்களான கோவை, மதுரை மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கி அனைத்து மக்களின் பங்களிப்புடன் எழில்மிகு கோவை, மாமதுரை என்ற ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்படும். பசுமையான பூங்காக்கள், தூய்மையான தெருக்கள், அனைவருக்கும் சுத்தமான குடிநீர், பாதுகாப்பான போக்குவரத்து அமைப்புகள், தொழில் பூங்காக்கள், தரமான வீட்டு வசதி போன்றவை இத்திட்டத்தில் இடம்பெறும். தலா ரூ.1 கோடி செலவில் இத்திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்படும்.

சென்னை தீவுத் திடலில் 30 ஏக்கர் பரப்பில் இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொது சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரை அரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்புற வசதிகளை ரூ.50 கோடியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தும்.

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள மறு குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த விளையாட்டு பொழுதுபோக்கு மையங்கள் உருவாக்கப்படும். இந்த மையங்களில் விளையாட்டு வசதிகள், நவீன உடற்பயிற்சி கூடம் தொழிற் பயிற்சி வழங்க பல்நோக்கு சமுதாயக் கூடங்கள், நூலகம் போன்ற வசதிகள் அமைக்கப்படும்.

வரும் ஆண்டில் ரூ.20 கோடியில் கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டு ஆகிய 4 இடங்களில் இந்த மையங்கள் உருவாக்கப்படும். மொத்தத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறைக்கு ரூ.1,369 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x