Published : 16 Jul 2014 10:24 AM
Last Updated : 16 Jul 2014 10:24 AM
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேட்டி, சட்டையில் சென்ற உயர் நீதின்ற நீதிபதி மற்றும் மூத்த வழக் கறிஞர்கள் உள்ளே அனுமதிக்கப் படாமல் அவமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் தமிழகம் முழு வதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிரிக்கெட் சங்க நிர்வாகத்துக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். வழக்கறிஞர்கள், தமிழறிஞர்களும் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர்.
சட்டப்பேரவையிலும் இந்தப் பிரச்சினை எதிரொலித்தது. கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கிரிக்கெட் கிளப்பை கண்டித்து பேசினர். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து செல்ல எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ள நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆடைப் பழக்கம் சமீபகாலமாக மாறி வருவதை அலசுவது பொருத்தமாக இருக்கும்.
பொதுவாக, அரசியல்வாதி என்றாலே கதர் சட்டை, கதர் வேட்டிதான் நினைவுக்கு வரும். கட்சி, கொள்கைகளுக்கு அப்பாற் பட்டு அரசியல்வாதிகளை இணைக்கும் ஒரே விஷயம் வேட்டி, சட்டை எனலாம். தமிழக சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் காலம்காலமாக வேட்டி அணிந்து வருவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், தற்போது இளம் உறுப்பினர்களின் வருகை அதிகரித்திருப்பதால் வேட்டிக்கு பதில் பேன்ட், சட்டையை அதிகம் காண முடிகிறது. முந்தைய சட்டப்பேரவையில் அப்போதைய திமுக உறுப்பினரான பரிதி இளம்வழுதி, இந்திய கம்யூனிஸ்ட் தளி ராமச்சந்திரன், பாமக வேல்முருகன், மார்க்சிஸ்ட் கட்சியின் டில்லிபாபு, மகேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிகுமார் போன்ற சிலர் பேன்ட் அணிந்து வந்தனர்.
இப்போது பேரவைக்கு பேன்ட் அணிந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். தேமுதிக தரப்பில் அதிக அளவில் இளம் உறுப்பினர் கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம்.
அக்கட்சியின் கொறடா சந்திர குமார், பாபுவேல்முருகன், சேகர் போன்றோரும் அதிருப்தி உறுப்பி னர்களில் அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன், மாஃபா பாண்டியராஜன், சுந்தர்ராஜன் ஆகியோரும் பெரும்பாலும் பேன்ட், சட்டையில்தான் பேரவைக்கு வருகின்றனர்.
இந்தப் பட்டியலில் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த டில்லிபாபு, பீம்ராவ், தளி ராமச்சந்திரனும் அடங்குவர்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எப்போதுமே பேன்ட், கலர் சட்டையுடனே காணப்படுவார். சமக தலைவர் சரத்குமாரையும் அடிக்கடி பேன்ட், சட்டையில் பார்க்க முடிகிறது. அதிமுக-வில் எப்போதாவது சில நேரங்களில் வி.பி.கலைராஜன் பேன்ட் அணிந்து வருவார். மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் வேட்டி, சட்டைதான். பெண் உறுப்பினர்களில் ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினரான நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் மட்டுமே சுடிதார் அணிந்து வருகிறார். பேரவைக்குள் ஆடை கட்டுப்பாடு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT