Published : 08 Sep 2017 07:47 AM
Last Updated : 08 Sep 2017 07:47 AM
மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி டெல்லியில் 130 நாட்களுக்கும் மேலாக தனி ஒருவராக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் தமிழக இளைஞர் ஒருவர்.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தனி ஒருவராக 130 நாட்களைத் தாண்டி தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் கன்னியாகுமரி மாவட்டம், தேமானூரைச் சேர்ந்த டேவிட்ராஜ் (28). வாள்வீச்சில் மூன்று முறை தேசிய சேம்பியனான இவர், அதன்மூலம் ராணுவத்தில் சேர்ந்தார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது, சக நண்பர்களுடன் இணைந்து மது ஒழிப்புப் போராட்டங்களிலும் ஈடுபடத் தொடங்கினார்.
உண்ணாமலைக்கடை பேரூராட்சிப் பகுதியில் மது ஒழிப்புப் போராளி சசி பெருமாள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற டேவிட், சசி பெருமாள் உயிரிழந்த 2-வது நாளில் அவரது வழியைப் பின்பற்றி அதேபகுதியில் ஆற்றூரில் உள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி, செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தினார்.
பல்வேறு நகரங்களில் மது ஒழிப்பு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டதன் விளைவாக, பல்வேறு வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டன.
இதனிடையே, தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, கடந்த மே 1-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தனி ஒருவராக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். டெல்லியில் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு போராட்டம் நடத்திவரும் பகுதிக்கு அருகிலேயே டேவிட்ராஜும் போராட்டம் நடத்தி வருகிறார். ஜி.கே.வாசன், ஆஸ்கர் பெர்ணான்டஸ் ஆகிய இருவரைத் தவிர வேறு முக்கிய தலைவர்கள் அவருக்கு இதுவரை ஆதரவு அளிக்கவில்லையாம்.
இதுகுறித்து டேவிட்ராஜ் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “எத்தனை நாட்கள் ஆனாலும் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு தெரியும் வரை டெல்லியைவிட்டு நகரப்போவதில்லை. மதுவின் தீமைகள் குறித்து மக்கள் விழிப்புணர்வு அடைந்து, ஒன்றிணைந்து போராடி மதுக்கடைகளை மூடச் செய்தாலே இந்தப் போராட்டத்தில் அல்ல, வாழ்க்கையிலேயே நான் வெற்றி பெற்றதற்கு சமம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT