Published : 20 Mar 2023 06:41 PM
Last Updated : 20 Mar 2023 06:41 PM
மதுரை: தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாட்டுக்கு அனுமதி கோரி தாக்கலான மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த வசந்தகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏப்.1, 2-ல் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டில் முதல் நாள் கருத்தரங்கம், 2வது நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆதீனங்கள், சன்னியாசிகள், ஆன்மிக பெரியவர்கள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டிற்கு அனுமதி வழங்க போலீஸாரிடம் மனு அளித்தும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே, 2 நாள் மாநாட்டுக்கு அனுமதி வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ''இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என தொடர்ந்து பேசி வருகிறார். அதற்காக ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளார். இதனால் அர்ஜுன் சம்பத் மீது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால் போராட்டங்கள் மற்றும் மாநாடு, பேரணிக்கு அனுமதி வழங்கினால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். ஆர்எஸ்எஸ் பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆதரவு, எதிர்ப்பு பேரணிகளுக்கும் அனுமதி வழங்கவில்லை. அதன் அடிப்படையில் மனுதாரரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைப் பதிவு செய்துகொண்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT