Published : 20 Mar 2023 05:05 PM
Last Updated : 20 Mar 2023 05:05 PM

தமிழ்நாடு பட்ஜெட் 2023: ரூ.621 கோடியில் சென்னை அண்ணா சாலையில் 4 வழி மேம்பாலம்

சென்னை: வரும் ஆண்டில், 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணாசாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது நெடுஞ்சாலைத் துறை தொடர்பான திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்களையும் அவர் அறிவித்தார். அதன் விவரம்: மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்க, சாலைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அரசு அதிக முன்னுரிமை அளிக்கின்றது.

> முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 1,407 கோடி ரூபாய் செலவில் 148 கி.மீ., சாலைகளை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளும், 524 கி.மீ., சாலைகளை 803 கோடி ரூபாய் மதிப்பில் இருவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

> வரும் ஆண்டில், 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படும். பன்னாட்டுப் பொறியியல் நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்று சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளுக்கு மேல் கட்டப்பட உள்ள இந்த மேம்பாலம் ஒரு நவீன பொறியியல் சாதனையாக அமையும். இப்பணிகள் நிறைவுற்றவுடன், பல முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, சாலைப் பாதுகாப்பும் மேம்படும்.

> பருவமழை மற்றும் வெள்ளக் காலங்களின்போது, போக்குவரத்து துண்டிக்கப்படாமல் இருக்க, 996 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 215 தரைப்பாலங்களுக்கு பதிலாக உயர்மட்டப் பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

> சென்னை புறவட்டச் சாலை திட்டத்திற்காக 1,847 கோடி ரூபாயும், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்திற்கு 1,500 கோடி ரூபாயும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-II க்கு 645 கோடி ரூபாயும் வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> இம்மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 19,465 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. | வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x