Published : 20 Mar 2023 04:44 PM
Last Updated : 20 Mar 2023 04:44 PM
சென்னை: சென்னையில் சீரான, சமமான வளர்ச்சியை உறுதி செய்ய “வட சென்னை வளர்ச்சி திட்டம்” என்ற திட்டத்தை 1,000 கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், கட்டமைப்பு பற்றாக்குறைகளையும் வளர்ச்சிக் குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும்” தமிழக பட்ஜெட் 2023-ல் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை தொடர்பான திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்களையும் அவர் அறிவித்தார். அதன் விவரம்: அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், குடிநீர் வழங்கலை சீரமைத்தல், கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்துதல், நீர்நிலைகளை புதுப்பித்தல், பசுமையான நகர்ப்புறங்களை உருவாக்குதல் போன்ற திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. இதுவரை, இத்திட்டத்தின் கீழ், 9,378 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, அவற்றில் 5,960 கோடி ரூபாய் மாநில அரசாலும் உள்ளாட்சி அமைப்புகளாலும் செலவிடப்படும். இந்த திட்டத்திற்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 612 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> மக்களுக்குக் குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதற்காக, உயிர் நீர் (ஜல் ஜீவன்) இயக்கத்தின் கீழ், 103 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு, 15,734 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவற்றில் 54 சதவீத செலவினத்தை மாநில அரசு ஏற்கும். மேலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 7,145 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த பன்னாட்டு நிறுவனங்களில் நிதியுதவிக்காக முன்மொழியப்படும். வரும் நிதியாண்டில் உயிர் நீர் இயக்கத்தைச் செயல்படுத்த 6,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
> 2010 ஆம் ஆண்டு, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் போது, கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் கலைஞர் அறிவித்தார்கள். கிடப்பில் போடப்பட்ட இத்திட்டத்தை மீட்டெடுத்து, கோவையில் உலகத் தரம் வாய்ந்த ‘செம்மொழிப்பூங்கா’ இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதன் முதற்கட்டமாக, 45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைக்கவும் இதர வசதிகளை மேம்படுத்துவதற்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மொத்தம் 172 கோடி ரூபாய் செலவில் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
> சிங்காரச் சென்னையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர்வழிகளை சுத்தப்படுத்தி, மறுசீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சிகளின் முதற்கட்டமாக, 44 கி.மீ. நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STPs) அமைத்தல் போன்ற ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், எழில் கொஞ்சும் பூங்காக்கள், பசுமை நடைபாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்கள், தரமான அருந்தகங்கள் போன்ற கண்கவர் பொழுதுபோக்கு அம்சங்கள் அடையாறு ஆற்றங்கரையை அலங்கரிக்கும். இத்திட்டம் அரசு-தனியார் பங்களிப்புடன் ஏறத்தாழ 1,500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
> நகர்ப்புற உள்ளாட்சிகளைத் தரம் உயர்த்தியதன் காரணமாக, அருகிலிருக்கும் புறநகர்ப் பகுதிகளும் அவற்றோடு இணைக்கப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள மண்சாலைகளைத் தரம் உயர்த்துவது அவசியமாகும். இப்பகுதிகளில், 4,540 கி.மீ. நீளமுள்ள மண் சாலைகளில், 1,633 கி.மீ. மண் சாலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்புகளால் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டில், 1,424 கி.மீ. மண் சாலைகள், மொத்தம் 1,211 கோடி ரூபாய் செலவில் தரமான சாலைகளாக மேம்படுத்தப்படும்.
> நகர்ப்புற உள்ளாட்சிகளில் பொதுக் கழிப்பறைகளின் செயல்பாட்டையும் பராமரிப்பையும் மேம்படுத்த அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிய பொதுக் கழிப்பறைகள், சமுதாயக் கழிப்பறைகள் கட்டுதல், இயங்கி வரும் கழிப்பறைகளைச் சீரமைத்தல், அவற்றின் பராமரிப்பு ஆகிய பணிகள் 430 கோடி ரூபாய் செலவில் அரசு - தனியார் பங்களிப்பு மூலம் ஒரு முன்னோடித் திட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் வெற்றியின் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள பிற மாநகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
> ஒளிர்மிகு உயிரோட்டமுள்ள பொது இடங்களை நகரங்களில் உருவாக்க அரசு பல முன்னெடுப்புகளைச் செய்து வருகின்றது. சென்னைத் தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில், இயற்கை வனப்புடன் நகர்ப்புற பொதுச் சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம், உணவகங்கள் போன்ற நவீன நகர்ப்புர வசதிகளை 50 கோடி ரூபாய் செலவில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தும்.
> தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள மறுகுடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், விளையாட்டு, பொழுதுபோக்கு மையங்கள் உருவாக்கப்படும். இந்த மையங்களில் விளையாட்டு வசதிகள், நவீன உடற்பயிற்சிக் கூடம், தொழிற்பயிற்சி வழங்க பல்நோக்கு சமுதாயக்கூடம், நூலகம் போன்ற வசதிகள் அமைக்கப்படும். வரும் ஆண்டில், 20 கோடி ரூபாய் செலவில் கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டு ஆகிய நான்கு இடங்களில் இந்த மையங்கள் உருவாக்கப்படும்.
> சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வது இன்றியமையாததாகும். ஆகவே இவ்விரண்டு நகரங்களையும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கி, அனைத்து மக்களின் பங்களிப்புடன் எழில்மிகு கோவை மற்றும் மாமதுரை என்ற ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்படும். பசுமையான பூங்காக்கள், தூய்மையான தெருக்கள், அனைவருக்கும் சுத்தமான குடிநீர், பாதுகாப்பான போக்குவரத்து அமைப்புகள், தொழிற்பூங்காக்கள், தரமான வீட்டுவசதி போன்ற பொருண்மைகள் இத்திட்டங்களில் இடம்பெறும். தலா ஒரு கோடி ரூபாய் செலவில் இத்திட்ட அறிக்கைகள் தயார் செய்யப்படும்.
> இம்மதிப்பீடுகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 24,476 கோடி ரூபாயும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 13,969 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெள்ள மேலாண்மை: அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது அரசால் முன்கூட்டியே திட்டமிட்டு, நிறைவேற்றப்பட்ட வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் அனைவராலும் பாராட்டப்பட்டன. 1,355 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளத் தடுப்புப் பணிகள், போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டு, சென்னைப் பெருநகரில் வெள்ள பாதிப்பு பெருமளவு குறைக்கப்பட்டது. வருங்காலங்களில் வெள்ளம், கனமழையை எதிர்கொள்ளும் வகையில், கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த, வரும் ஆண்டில் வெள்ளத் தடுப்புப் பணிகளும், நீர் வழிகளைத் தூர்வாரும் பணிகளும் 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
சமச்சீர் வளர்ச்சி: தமிழ்நாடு ஒரு வளர்ச்சி பெற்ற மாநிலமாகத் திகழ்ந்தாலும் சமூக, பொருளாதாரக் குறியீடுகளின் அடிப்படையில், சில வட்டாரங்கள் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. இப்பகுதிகளும் வளர்ச்சியடையும் வகையில், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இலக்குகளை எட்டுவதற்காக ‘வளமிகு வட்டாரங்கள் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அரசு தொடங்கும். இத்திட்டத்தின் கீழ், மலைப்பகுதிகள் உட்பட மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய 50 வட்டாரங்கள் கண்டறியப்பட்டு, ஒவ்வொன்றிலும் தலா ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
> நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான, சென்னை, பல்வேறு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட ‘வாழ உகந்த நகரங்கள் பட்டியலில்’ முன்வரிசையில் உள்ளது. இருப்பினும், நகரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக வடசென்னையில், போதிய அளவில் அடிப்படை வசதிகளும் கட்டமைப்புகளும் இல்லா நிலை உள்ளது. சென்னையில் சீரான, சமமான வளர்ச்சியை உறுதி செய்ய “வட சென்னை வளர்ச்சி திட்டம்” என்ற திட்டத்தை 1,000 கோடி ரூபாய் செலவில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், கட்டமைப்பு பற்றாக்குறைகளையும் வளர்ச்சிக் குறியீடுகளின் குறைபாடுகளையும் கண்டறிந்து, அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியையும் நடைமுறையிலுள்ள திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும்.| வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT