Published : 20 Mar 2023 03:40 PM
Last Updated : 20 Mar 2023 03:40 PM
சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 2023-24 ஆம் ஆண்டில், 35 கோடி வேலை நாட்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 22,562 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது ஊரக வளர்ச்சித்துறை தொடர்பான திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டு விவரங்களையும் அவர் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:
> அடுத்த இரண்டு ஆண்டுகளில் 10,000 கி.மீ. சாலைகளின் தரத்தை மேம்படுத்தி, ஊரகப்பகுதிகளில் சிறப்பான சாலை வசதிகளையும், பொருளாதார மேம்பாட்டையும் உறுதிசெய்திட, முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தை அரசு இவ்வாண்டு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், முக்கியமான இணைப்புச் சாலைகள், பேருந்துகள் இயங்கும் சாலைகள் தரம் உயர்த்தப்படும். வரும் நிதியாண்டில், 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5,145 கி.மீ. சாலைகளுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
> கிராமப்புறங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில், 6,618 நீர்நிலைகளில் மொத்தம் 638 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும், 10,000 சிறிய நீர் நிலைகள், குளங்கள், ஊரணிகள் 800 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.
> வீட்டுவரி, தொழில் வரி, குடிநீர் வரியை ஊராட்சிகளுக்கு இணையவழியில் எளிதில் செலுத்துவதற்கு ஒரு வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில், கட்டட வரைபடம், மனை வரைபட அனுமதிகளையும் இணைய வழியில் பெற வழிவகை செய்யப்படும்.
> மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், இவ்வாண்டு இதுவரை, 10,914 கோடி ரூபாய் செலவில் 30.87 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2023-24 ஆம் ஆண்டில், இத்திட்டத்தின் கீழ், 35 கோடி வேலை நாட்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு ரூ.22,562 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. | வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 முக்கிய அம்சங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT