Published : 20 Mar 2023 03:24 PM
Last Updated : 20 Mar 2023 03:24 PM

மழையால் கால்வாய் உடைப்பு: மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தை சூழ்ந்த கழிவுநீரால் பயணிகள் அவதி

மதுரை: மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் சாக்கடை கால்வாய் உடைந்து கழிவுநீர் வளாகம் முழுவதும் தேங்கி தூர்நாற்றம் வீசுவதால் பயணிகள், பஸ்ஸுக்காக காத்திருக்க முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

மதுரை மாட்டுத் தாவணியில் தென் தமிழகத்திலேயே பெரிய ஒருங்கிணைந்த எம்ஜிஆர் பேருந்து நிலையம் செயல்படுகிறது. இந்தப் பேருந்து நிலையத்தை கடந்த 1999-ம் ஆண்டு மே 25-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். தமிழகத்திலேயே ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற ஒரே பேருந்து நிலையமாக இந்தப் பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்தப் பேருந்து நிலையத்தை பராமரிக்காமல் கைவிட்டனர். ஆனால், பேருந்து நிலையத்தின் பெயரை மட்டும் எம்ஜிஆர் பேருந்து நிலையமாக மாற்றினர். பேருந்து நிலையத்தில் இருந்த இலவச கழிப்பிட அறைகளை கட்டண கழிப்பறையாக மாற்றினர். அந்தக் கழிப்பிட அறைகளும் சரியாக பராமரிக்கப்படுதில்லை. அதுபோல், மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. மேற்கூரை அவ்வப்போது உடைந்து கீழே விழுந்து வருகின்றன.

இந்நிலையில், மதுரை மாநகரில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையில் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் மழைநீர் புகுந்தது. அதனால், கழிவுநீர் கால்வாய் உடைந்து பேருந்து நிலையம் வளாகம் முழுவதும் கழிவுநீர் தேங்கி நின்றது. அதனால், பயணிகள் பேருந்து நிலையம் வளாகத்தில் நடக்க முடியவில்லை. கடும் தூர்நாற்றம் வீசியதால் பேருந்து நிலையம் வளாகத்தில் பயணிகள் குழந்தைகளுடன் காத்திருக்க முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

இதுபோல், மழைக்காலத்தில் அடிக்கடி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்து கழிவுநீர் தேங்கி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம், பேருந்து நிலையத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய், மழைநீர் கால்வாய்களை பராமரித்து மழைநீர், கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "ரூ.12 கோடியில் பேருந்து நிலையத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய் புதிதாக போடப்பட உள்ளது. பேருந்து நிலையம் வளாகத்தில் தார் சாலை அமைக்கப்படுகிறது. உடைந்த டைல்ஸ்களுக்கு பதில் புதிய டைல்ஸ் பதிக்கப்பகிறது. பேருந்து நிலையம் மேற்கூரை முன்பு சிமெண்ட் வைத்து பூச மட்டும் செய்யப்பட்டிருந்தது. தற்போது அதில் தட்டு ஓடுகள் பதிக்கப்பட உள்ளது. பயணிகள் குடிக்க ஆர்வோ குடிநீர் வைக்கப்படுகிறது. இதுபோல் மொத்தம் 15 வகையான பராமரிப்புப் பணிகள் நடக்க உள்ளது" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x