Published : 20 Mar 2023 06:11 AM
Last Updated : 20 Mar 2023 06:11 AM

மியூசிக் அகாடமி விருதுகள் அறிவிப்பு: பாம்பே ஜெயஸ்ரீ, வசந்தலட்சுமி நரசிம்மாச்சாரி, அரிமளம் பத்மநாபன் தேர்வு

பாம்பே ஜெயஸ்ரீ, வசந்தலட்சுமி நரசிம்மாச்சாரி, அரிமளம் பத்மநாபன்

சென்னை: சென்னை மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதுக்கு பிரபல கர்னாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிருத்ய கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டிடிகே விருது, இசை அறிஞர் விருதுகளுக்கும் விருதாளர்கள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி, நிருத்திய கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா உள்ளிட்ட விருதுகள், கர்னாடக இசை உலகில் பெருமைமிகு விருதாக மதிக்கப்படுகின்றன. இந்நிலையில், அகாடமியின் நிர்வாகக் குழு நேற்று கூடியது. இதில், இந்த ஆண்டுக்கான மியூசிக் அகாடமியின் விருதுகளைப் பெறும் கலைஞர்கள் தேர்வு குறித்து ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து மியூசிக் அகாடமி தலைவர் ‘இந்து’ என்.முரளி கூறியதாவது:

2023-ம் ஆண்டுக்கான மியூசிக் அகாடமியின் விருதுகளை பெறும் கலைஞர்களை அகாடமியின் நிர்வாகக் குழு கூடி ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.

‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு பிரபல கர்னாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இசைப் பயிற்சியை தனது தந்தை சுப்ரமணியன், தாய் சீதா சுப்ரமணியனிடம் தொடங்கியவர். பின்னாளில் டி.ஆர்.பாலாமணியிடமும், இசை மேதை லால்குடி ஜெயராமனிடமும் இசை பயின்றவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றவர். இவர் பரதநாட்டியக் கலைஞரும், வீணைக் கலைஞரும்கூட. தமிழ்உட்பட பல மொழி திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார். சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு இசைப் பயிற்சி அளித்து வருகிறார்.

நிருத்ய கலாநிதி விருதுக்கு பிரபல பரதநாட்டியக் கலைஞர் வசந்தலட்சுமி நரசிம்மாச்சாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பரதநாட்டியத்தோடு, குச்சிப்புடி நடனத்திலும் தனது திறனை வளர்த்துக் கொண்டிருப்பவர். நட்டுவாங்கம், மொழிப்புலமை, பாடல்களை எழுதும் புலமை கொண்டவர். அடையாறு கே.லஷ்மணனிடம் பரதக் கலையை கற்றவர். பிரபல பரதநாட்டியக் கலைஞரான தனது கணவர் நரசிம்மாச்சாரியுடன் இணைந்து ஏராளமான நடன நிகழ்ச்சிகளை வழங்கியவர்.

தனது 60 ஆண்டுகால அர்ப்பணிப்பு மிக்க கலை வாழ்வின் மூலமாக எண்ணற்ற மாணவர்களை உருவாக்கிய கேரளாவை சேர்ந்தபல்குளங்கரா அம்பிகா தேவி மற்றும் மூத்த மிருதங்க வித்வானும்,இசை அறிஞரும், எழுத்தாளருமான கே.எஸ்.காளிதாஸ் ஆகிய இருவரும் சங்கீத கலா ஆச்சார்யா விருதை பெறுகின்றனர்.

தவில் கலைஞர் திருநாகேஸ்வரம் டி.ஆர்.சுப்ரமணியம், சற்குருநாத ஓதுவார் ஆகியோர் டிடிகே விருதை பெறுகின்றனர். தவில் வாசிப்பில் 60 ஆண்டுகால பழுத்த அனுபவம் கொண்டவர் பிரபல தவில் வித்வான் டி.ஆர்.சுப்ரமணியம். அதேபோல, 1998 முதல் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஓதுவாராக இருப்பவர் சற்குருநாத ஓதுவார். இவர் பாடியுள்ள பன்னிரு திருமுறைகள் இசை குறுந்தகடுகள் பிரபலமானவை.

இசைத் துறையில் நீண்ட நெடிய ஆராய்ச்சி அனுபவம் கொண்ட டாக்டர் அரிமளம் எஸ்.பத்மநாபன், இசை அறிஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரம்பரிய நாடகங்களில் கையாளப்படும் இசை குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் இவர்.

சங்கீத கலாநிதி விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பாம்பே ஜெயஸ்ரீ, 2023 டிச.15 முதல் 2024 ஜன.1-ம் தேதி வரை நடைபெறும் மியூசிக் அகாடமியின் 97-வது இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளுக்கு தலைமை வகிப்பார். 2024 ஜன.1-ம் தேதி மியூசிக் அகாடமியில் நடைபெற உள்ள சதஸில் சங்கீத கலாநிதி, சங்கீத ஆச்சார்யா, டிடிகே விருது, இசை அறிஞர் விருது ஆகியவை வழங்கப்படும். மியூசிக் அகாடமியின் 17-வதுஆண்டு நாட்டிய விழா தொடங்கும்நாளான 2024 ஜன.3-ம் தேதி நிருத்யகலாநிதி விருது வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x