Published : 20 Mar 2023 06:11 AM
Last Updated : 20 Mar 2023 06:11 AM
சென்னை: தமிழ்நாடு, கேரள காங்கிரஸ் சார்பில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நடைபயணம் ஈரோட்டில் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது.
மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் 91-வது பிறந்த நாள் விழா சத்யமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர்.ராஜகோபால், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கத்தின் மாவட்ட அவைத் தலைவர் மா.வே.மலையராஜா ஆகியோர் அழகிரி முன்னிலையில், காங்கிரஸில் இணைந்தனர். பின்னர், அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, வைக்கத்தில் தீண்டாமைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பெரியார் பங்கேற்று, சிறைக்குச் சென்றார். அந்த நிகழ்வின் நூற்றாண்டுவிழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, தமிழ்நாடு மற்றும் கேரள காங்கிரஸ் சார்பில், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நடைபயணத்தை வரும்28-ம் ஈரோட்டில் நான் தொடங்கிவைக்கிறேன். நடைபயணம் வெற்றியடைய, மூத்த தலைவர்ஈவிகேஎஸ்.இளங்கோவன்தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது.
ஜனநயாகம் குறித்து மாணவர்கள் மத்தியில் பேசுவதற்காக ராகுல் காந்தி இங்கிலாந்து சென்றார். அங்கு, ‘‘இந்தியாவில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கருத்துகள் முடக்கப்பட்டன. ஒலிபெருக்கி நிறுத்தப்பட்டது. பேசுவதற்கு அனுமதி வழங்குவதில்லை.
காங்கிரஸ் வளர்த்த ஜனநாயகம், பாஜக ஆட்சியில் நசுக்கப்படுகிறது’’ என்றார். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தேச விரோதம் என்று கூறி, அவரது வீட்டைச் சுற்றி மத்திய அரசு போலீஸாரை நிறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆ.கோபண்ணா, மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT