Published : 20 Mar 2023 06:06 AM
Last Updated : 20 Mar 2023 06:06 AM
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.84.84 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள், ரயில் பாலங்களின் கீழ் பூங்கா அழகுபடுத்தும் பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலர் வெ.இறையன்பு, பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்கும்படி அறிவுறுத்தினார்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத் தடுப்பு நிவாரண நிதியின் கீழ், அடையாறு மண்டலம், இந்திரா நகர், முதல் அவென்யூவில் ரூ.29.16 லட்சம், ஜெர்மன் வங்கி நிதியுதவியுடன் கோவளம் வடிநிலப் பகுதியில் பெருங்குடி மண்டலத்தில் ரூ.31.58 கோடியிலும், ஆலந்தூர் மண்டலத்துக்குட்பட்ட நங்கநல்லூரில் ரூ.7.87 கோடியிலும் புதிய மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் கோடம்பாக்கம் மண்டலம், அண்ணா பிரதான சாலையில் ரூ.24.7 கோடி, ஆர்யகவுடா சாலையில் ரூ.3.52 கோடியிலும் புதிய மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதியில் திரு.வி.க.நகர் மண்டலம், பல்லவன் சாலையில் ரூ.15.4 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நேற்று தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், பணிகள் அனைத்தையும் காலதாமதமின்றி மேற்கொண்டு பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வரவும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றி பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ் - புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ். ரயில் நிலையம் வரை பாலங்களின் கீழ் ரூ.93 லட்சம் மதிப்பில் செயற்கை நீரூற்று, பசுமை புல்வெளி, மின்விளக்கு வசதி ஏற்படுத்துதல், அழகுபடுத்தும் பணிகள், ஆதம்பாக்கம் எம்.ஆர்.டி.எஸ். - தில்லை கங்கா நகர் வரை ரூ.12 லட்சம் செலவிலும், புழுதிவாக்கம் எம்.ஆர்.டி.எஸ்- ஆதம்பாக்கம் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் வரை ரூ.43 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பசுமையாக்கும் பணிகளையும் தலைமைச் செயலர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது நகராட்சி நிர்வாக செயலர் சிவ்தாஸ்மீனா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT