Published : 27 Sep 2017 06:40 PM
Last Updated : 27 Sep 2017 06:40 PM
சென்னை மெரினா கடற்கரையில் குரங்குகள் துன்புறுத்தப்படுவதை கண்ட விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் அந்த குரங்குகளை மீட்டு காவல்துறையில் புகார் அளித்து வனத்துறையில் ஒப்படைத்துள்ளார்.
மெரினா கடற்கரையில் சமீபத்தில் காற்று வாங்க வந்த விலங்குகள் நல ஆர்வலர் அஷ்வந்த், கடற்கரை மணலில் நரிக்குறவ சிறுவர்கள் சிலர் குரங்கின் கழுத்தில் கயிற்றைக்கட்டி சாலையில் இழுத்துச் செல்வதும் அதை அடித்து துன்புறுத்துவதையும் பார்த்து உடனடியாக அந்த குரங்கு குட்டிகளை மீட்டு மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்து பின்னர் வனத்துறையினரிடம் அதை பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து அஷ்வந்திடம் 'தி இந்து தமிழ்' சார்பில் பேசிய போது அவர் கூறியதாவது:
நேற்று மெரினா கடற்கரைக்கு வந்தபோது சில சிறுவர்கள் இரண்டு குட்டி குரங்குகளை கழுத்தில் கயிறு கட்டி அடித்து இழுத்துச் செல்வதை பார்த்தேன்.
அவர்கள் அந்த குரங்கு குட்டிகளை துன்புறுத்துவதை பார்த்து உடனடியாக அந்த குரங்கு குட்டிகளை மீட்டு மெரினா போலீஸில் புகார் அளித்து பின்னர் வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தேன்.
போலீஸார் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?
போலீஸார் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இதற்கு முன்னர் இதே போன்று பல குரங்குகளை மீட்டுள்ளேன்.
எவ்வளவு குரங்குகளை மீட்டிருப்பீர்கள்?
இதுவரை இவ்வாறு துன்புறுத்தப்பட்ட 27 குரங்குகளை மீட்டுள்ளேன்.
கடற்கரையில் குதிரைகளை வைத்து பிழைக்கிறார்களே. அது விலங்குகள் துன்புறுத்தலில் வராதா?
குதிரைகளை கடும் வெயிலில் நிறுத்தி துன்புறுத்தக்கூடாது. அதே போன்று அதை பராமரிக்க நல்ல ஷெட் இருக்க வேண்டும். ஆனால் கடற்கரையில் தொழில் செய்பவர்கள் குதிரைகளை சரியாக பராமரிக்காமல் கடும் வெயிலில் அதை துன்பப்படுத்துகின்றனர்.
இதற்கு முன்னர் இரண்டு காயம்பட்ட குதிரைகளை மீட்டுள்ளேன். யாராவது புகார் அளிக்காமல் நடவடிக்கை எடுப்பதும் சிரமம். இவ்வாறு அஷ்வந்த் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT