Last Updated : 19 Mar, 2023 03:58 PM

2  

Published : 19 Mar 2023 03:58 PM
Last Updated : 19 Mar 2023 03:58 PM

புதுச்சேரி | நாடாளுமன்ற தேர்தலில் நாராயணசாமி போட்டியிட தயாரா? - சவால்விடும் அதிமுக

புதுச்சேரி: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாராயணசாமி போட்டியிட தயாரா? அவர் போட்டியிட்டால் அவரை எதிர்த்து அதிமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய பல்வேறு நலத்திட்ட உதவிகளை எங்களது கூட்டணியின் முதல்வர் அறிவித்துள்ளார்.

இதனால் விரக்தியின் விளம்புக்குச் சென்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி பொய்யான பல கருத்துகளை எடுத்துக்கூறி மக்களை குழப்பியுள்ளார். கடந்த 5 ஆண்டு காலத்தில் ஒரு முழுமையான பட்ஜெட்டைக் கூட தாக்கல் செய்ய முடியாதவர் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி. அவர், 12 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்த எங்களது முதல்வரை பற்றி குறை கூற எந்த தகுதியும் இல்லை.

கடந்த ஆட்சியில் ஒருவருக்கு கூட புதிதாக பென்ஷன் கொடுக்கவில்லை. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு 23,500 பேருக்கு புதிதாக முதியோர், விதவை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. அதோடு, விதவைகளுக்கான உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 70 வயதை கடந்த மீனவ முதியோருக்கு ரூ. 500 பென்ஷன் உயர்த்தப்பட்டுள்ளது. இலவச அரிசிக்கான பணம் தங்கு தடையின்றி வழங்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளியில் படிக்கும் பட்டியலின பிள்ளைகளுக்கு முழு கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொண்டு அதற்கான நிதியுதவியை தடையின்றி தொடர்ந்து வழங்கி வருகிறது. விவசாய கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உயர்க்கல்வி படிப்புக்கு கடந்த ஆட்சியில் வைக்கப்பட்ட நிலுவை தொகையும் வழங்கப்பட்டுள்ளது. ரூ. 3,500 ஊதியத்தில் பணிபுரிந்த அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

இதுபோல் எண்ணற்ற திட்டங்களை சட்டப்பேரவையில் அறிவித்தும், அதற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கியும், அறிவித்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்தியும் வருகிறது எங்கள் அரசு. 5 ஆண்டு முதல்வராக இருந்தவருக்கு பட்ஜெட் என்றால் என்ன என்று தெரியவில்லை. பட்ஜெட்டில் பணம் இல்லையென்றாலும், திருத்தப்பட்ட மதிப்பீட்டின் போது, பல துறைகளில் செலவு செய்யப்படாமல் இருக்கும் பணத்தை எடுத்து அவசியமான திட்டங்களுக்கு செலவு செய்யப்படும். அந்த நேரத்தில் அந்த பணம் அரியர்ஸ் உடன் வழங்கப்படும்.

இப்போது சிலிண்டர் மானியம் ரூ.300, பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, விதவைக்கு பென்ஷன் தொகை உயர்வு, மீனவர்களுக்கு பென்ஷன் தொகை உயர்வு, பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட் என பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டங்களுக்கு ஆண்டுக்கு ரூ.300 கோடிதான் செலவாகும். இதற்கு மொத்த பட்ஜெட்டில் 3 சதவீதம் தான் செலவாகும்.

குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்தை அறிவிக்கும் போது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. ஆனால், இந்த திட்டத்தை துவங்கி செயல்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது 2.18 கோடி குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை கொடுக்கப்படும் என்று அறிவித்தார். இதுவரை ஒரு குடும்பத்துக்காவது ஒரு பைசா கொடுத்திருப்பாரா?

சட்டப்பேரவை தேர்தலில் நிற்காமல் ஓடிய நாராயணசாமிக்கு இந்த ஆட்சியை பற்றி குறை கூற என்ன தகுதி இருக்கிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை அழித்த நாராயணசாமி, மீண்டும் காங்கிரஸில் புத்துணர்ச்சி ஏற்பட வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயாரா? அவர் போட்டியிட்டால், அவரை எதிர்த்து அதிமுக போட்டியிடும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x