Published : 01 Sep 2017 10:51 AM
Last Updated : 01 Sep 2017 10:51 AM

விழித்துக்கொள்வோம்.. வேண்டாமே விபரீத விளையாட்டு!- வெளிநாடுகள், வெளி மாநிலங்களைக் கடந்து மதுரை வரை வந்துவிட்ட பயங்கரம்

கல்லூரி மாணவர் தற்கொலை - பதற்றத்தில் பெற்றோர் - என்ன செய்யவேண்டும் நாம்?

தமிழகத்தில் பெற்றோர் மத்தியில் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது படுபயங்கர ஆன்லைன் வீடியோ கேம் ‘ப்ளூ வேல்’. ரஷ்யாவில் அறிமுகமாகி, வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் என்று பல இளைஞர்கள், மாணவர்களை பலிவாங்கிய இந்த ‘கொலைகார’ விளையாட்டு தற்போது மதுரைக்கு பக்கத்தில் இருக்கும் குக்கிராமம் வரை தனது விஷக் கிளையைப் பரப்பியிருக்கிறது. விளையாட்டு என்ற பெயரிலான ‘ப்ளூ வேல்’ விஷக் கரங்களில் சிக்கிய கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரை விட்டிருக்கிறார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரி அருகில் உள்ளது மொட்டைமலை. இங்குள்ள கலைஞர் நகரைச் சேர்ந்தவர் ஜெயமணி (48). பேக்கரி கடையில் மாஸ்டராக உள்ளார். இவரது மனைவி டெய்சிராணி (45). இவர் கப்பலூரில் தனியார் கம்பெனியில் பணிபுரிகிறார். இவர்களது இளைய மகன் விக்னேஷ் (19), மதுரை பசுமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்துவந்தார். காலை 8.30 மணிக்கு கல்லூரி சென்றுவிட்டு, மதியம் 2 மணிக்கு வீடு திரும்புவார். அப்பா, அம்மா, அண்ணன் ஆகிய 3 பேரும் வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையில்தான் வீடு திரும்புவார்கள். அதுவரை விக்னேஷ் மட்டும் வீட்டில் இருப்பார். இந்த தனிமைதான் அவருக்கு எமனாகப்போகிறது என்பதை குடும்பத்தினர் அறியவில்லை.

30-ம் தேதி புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு ஜெயமணி வீடு திரும்பினார். படுக்கை அறையில் சேலையில் தூக்கு போட்டு விக்னேஷ் தொங்குவதைப் பார்த்து அலறினார். தகவல் கிடைத்து வந்த ஆஸ்டின்பட்டி போலீஸார், மாணவர் விக்னேஷின் சடலத்தைமீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அவரது இடது கையில் ‘ப்ளூ வேல்’ என எழுதி, அருகே திமிங்கிலம் படம் வரையப்பட்டிருந்தது. ‘ப்ளூ வேல்’ என்ற வீடியோகேமில் ஈடுபடுபவர்கள்தான் இவ்வாறு வரைந்துகொள்வார்கள் என்பதால், போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. வீட்டில் இருந்து அவரது செல்போனை கைப்பற்றினர். அவர்கள் சந்தேகித்ததுபோலவே, ‘ப்ளூவேல் சேலஞ்சிங் கேம்’ அதில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தது. அவர் கல்லூரிக்கு கொண்டுசெல்லும் பையையும் ஆய்வு செய்தனர். அதில் உள்ள ஒரு நோட்டில், ‘‘நீலத் திமிங்கிலம் விளையாட்டு அல்ல, விபரீதம். ஒருமுறை உள்ளே போனால் வெளியில் வரமுடியாது’’ என எழுதப்பட்டு இருந்தது. தடை செய்யப்பட்ட ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் சிக்கி விக்னேஷ் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு பதிவு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

பல நாடுகளிலும் பரவி நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை ‘ப்ளூ வேல்’ விளையாட்டு பலிவாங்கியுள்ளது. சத்தமின்றி இந்தியாவில் நுழைந்த இந்த குரூர விளையாட்டு கடந்த 2 மாதங்களுக்குள் மகாராஷ்டிர மாநிலம் மும்பை, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர், மேற்குவங்க மாநிலம் அனந்த்பூர், கேரள மாநிலம் திருவனந்தபுரம் என்று நாட்டின் பல இடங்களிலும் மாணவர்களின் உயிரைப் பறித்துள்ளது.

எமனாக மாறிய ஸ்மார்ட்போன்

ஜெயமணி - டெய்சிராணி தம்பதியர் பள்ளியைத் தாண்டாதவர்கள். விக்னேஷ் பிளஸ் 2-வில் 900 மதிப்பெண் எடுத்ததால் அவரை கல்லூரியில் சேர்த்துள்ளனர். அருகே உள்ள பால் கடையில் பகுதிநேரமாக வேலை செய்தபடியே, கல்லூரிக்குச் சென்று வந்தார். விக்னேஷ் வற்புறுத்திக் கேட்டதால், 2 மாதம் முன்பு கடன் வாங்கி ரூ.6,000-க்கு ஸ்மார்ட்போன் வாங்கித் தந்துள்ளனர். அதுமுதல், எந்நேரமும் செல்போனும் கையுமாக இருந்துள்ளார். செல்போனை எடுத்துக்கொண்டு அடிக்கடி மாடிக்குச் செல்வார். பல மணிநேரம் அதிலேயே செலவிடுவார். வீட்டில் சரியாகப் பேசுவதில்லை. மற்ற வேலைகளும் செய்வதில்லை. பெற்றோர், சகோதரரும் அவரைக் கண்டிப்பார்கள். ‘காலேஜ் படிப்பு சம்பந்தமா பிரெண்ட்ஸ்கூட பேசுறேன்.. மெசேஜ் அனுப்புறேன்’ என்று சொல்லி சமாளித்து வந்துள்ளார்.

மாடியில் தினமும் செல்ஃபி

கடந்த சில வாரங்களாகவே அவரது அன்றாட நடவடிக்கைகளில் சில விபரீத மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. ‘படிக்க நேரமில்லை’ என்று கூறி, பால் கடை வேலையை விட்டு நின்றுவிட்டார். பள்ளி, கல்லூரி மாணவர்கள், நண்பர்களோடு சேர்ந்து மாடிக்குச் சென்று செல்ஃபி எடுப்பது வழக்கமாகிப் போனது. வெளி மாநிலங்களில் இருந்து நண்பர்கள் சிலர் செல்போனில் பேசுவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில், ‘ப்ளூ வேல்’ விளையாட்டு குறித்து மீடியாக்களில் 3 நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானதைப் பார்த்து, விக்னேஷின் பெற்றோர் பதறிவிட்டனர். ‘‘அதை இனிமே விளையாடாதே’’என்று கூறியுள்ளனர். ‘‘பயப்படாதீங்க, உங்களைவிட்டுப் போகமாட்டேன்’’ என்று கூறியிருக்கிறார் விக்னேஷ். இந்த சூழலில்தான், விக்னேஷின் செல்போனுக்கு நேற்று முன்தினம் அந்த தகவல் வந்திருக்கிறது. ‘‘இந்த விளையாட்டின் இறுதிக் கட்டத்திலும் வென்று, உயிரோடு இருப்பேன்’’ என சவால் விட்ட விக்னேஷ் அநியாயமாக தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார் என்று கூறி கதறுகின்றனர் பெற்றோர்.

75 பசங்களைக் காப்பாத்துங்க!

‘‘என் மகன் ‘ப்ளூ வேல்’ கேம் மூலம் மிரட்டப்பட்டு இறந்துவிட்டான். அவனோடு 75-க்கும் மேற்பட்டோர் இந்த நெட்வொர்க்கில் இணைந்துள்ளனர். இந்த பயங்கரம் என் மகனோடு போகட்டும். மற்ற மாணவர்களைக் காப்பாற்றுங்கள். இந்த கொடூர விளையாட்டை தடை செய்யுங்கள்’’ என்று கதறினார் விக்னேஷின் தாய் டெய்சிராணி.

இந்த விபரீத விளையாட்டு ஏற்படுத்திவரும் பாதிப்பு குறித்து சமூக ஆர்வலர்கள், நிபுணர்கள் பகிர்ந்துள்ள தகவல்கள்:

பள்ளிப் பருவம் வரை ஸ்மார்ட் போனை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தேவை இருக்கும்பட்சத்தில் உரிய கண்காணிப்புடன் பிள்ளைகள் பயன்படுத்த அனுமதிக்கலாம். கல்லூரிப் பருவத்துக்குச் சென்றுவிட்ட பிள்ளைகள் ஓரளவுக்கு புரிதல் தன்மைக்கு வந்திருப்பார்கள். அதனால், மொபைலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், என்ன மாதிரியான பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து அவர்களிடம் விளக்க வேண்டும். அவ்வப்போது அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் என்ன மாதிரியான கேம் விளையாடுகிறார்கள் என்பதை தொடர்ந்து கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மொபைல் பயன்படுத்தும் பிள்ளைகள், தனிமையில் இருக்க விரும்புகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அவர்களை தனிமையில் இருந்து மீட்டு, சகஜமான சூழலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அறையை நீண்ட நேரம் பூட்டிக்கொண்டு எந்தக் காரியம் செய்யவும் பிள்ளைகளை அனுமதிக்கக் கூடாது. மகன், மகளின் நண்பர்களிடமும் மொபைல், கம்ப்யூட்டரை தவறாகப் பயன்படுத்துவதில் இருக்கும் விபரீதங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கின்றனர்.

தற்கொலை செய்யாவிட்டால் கொலை!

விக்னேஷின் சகோதரர் சத்தியமூர்த்தி கூறியது: கடந்த ஒருவாரமாக அவனது போக்கில் நிறைய மாற்றம் இருந்தது. செல்போனின் விளையாடும் போது, யாரையும் பார்க்க அனுமதிக்க மாட்டான். கேட்டால் சாதாரணமாக விளையாடுகிறேன். இதை எதற்கு கேட்கிறீர்கள் என, கோபமடைவான். சில நாளுக்கு முன், அவனது இடது கையில் காயம் இருப்பது பற்றி கேட்டேன். கீழே விழுந்தாக கூறினான். இரு தினமாக என்னிடம் சரியாக பேசவில்லை. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தேன். அவன் தூங்கவில்லை. கேட்ட போது, கோபத்துடன் மாடிக்கு சென்றான். சிறிது நேரத்தில் மாடியிலும் காணவில்லை. வெளியில் தேடிவிட்டு நானும் தூங்கினேன். காலையில் அவன் வீட்டில் இருந்தான். வழக்கம் போல் பால் வாங்க சென்றான். நானும் வேலைக்கு சென்றேன். சில நாளுக்கு முன், அவனது செல்போனில் நானும் விளையாடலாமா என, கேட்டேன். ஒருவர் மட்டுமே விளையாடலாம். குறிப்பிட்ட நாளுக்குபின், இக் கேம் முடிந்த பின் உனக்கு சொல்லித் தருகிறேன் என்றான். 2 நாட்களுக்கு முன், அவனுடன் கேமில் பங்கேற்ற நபர் இறுதி விளையாட்டில் நீ சாகவில்லை எனில் உன் குடும்பத்தில் உள்ளவர்கள் இறக்கச் செய்வோம் என, மிரட்டல் வந்ததாக கூறினான். இவற்றை எல்லாம் தெரிந்தும் அவனை காப்பாற்ற முடியவில்லை. புகார் செய்தால் அவன் வேறு முடிவெடுப்பான் என, பயந்துவிட்டோம். இதன் விளைவு அவனது உயிர் பறிக்கப்பட்டுள்ளது. தம்பியுடன் நிறைய நண்பர்களும் இணைப்பில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. அவர்களை காப்பாற்றவேண்டும். அவனது நெருகிய கல்லூரி நண்பர்கள் கூட இங்கு வரவில்லை. பயந்து கொண்டு வராமல் இருக்கலாம்,’’ என்றார்.

திட்டமிட்டு மறைத்துவிட்டானே; நண்பர்கள் உருக்கம்

நண்பர் அரசரப் அலி: எனக்கு பள்ளிக்கால நண்பர். எதுவுவாக இருந்தாலும் அடிக்கடி பேசுவோம். இது பற்றி என்னிடம் பகிர்ந்து இருந்தால் காப்பாற்றி இருப்பேன். இந்த விளையாட்டு மூலம் எனது நண்பரை இழந்துவிட்டேன். ஆன்லைன் மூலம் இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தி இந்திய இளைஞர்கள் அழிக்கும் இந்த சதியை தடுக்கவேண்டும்,’’ என்றார்.

நண்பர் பொன்சுதன்: நானும், விக்னேசும் ஒரே கல்லூரியில் படிக்கிறோம். எதுவாக இருந்தாலும், என்னிடம் சொல்வான். அவனது பழைய செல்போனில் சரியாக பேச முடியவில்லை என, என்னை தான் புதிய செல்போன் வாங்க அழைத்துச் சென்றான். தினமும் கல்லூரியில் சந்தித்துக்கொள்வோம். நேற்று முன்தினம் வகுப்பு முடிந்து சீக்கரமே வீட்டுக்கு சென்றான். 2 நாளாகவே அவனது நடவடிக்கையில் சில மாற்றம் அறிய முடிந்தது. பள்ளிக் காலம் முதல் நாங்கள் 5 பேர் நெருங்கி பழகுவோம். ஏன் எங்களிடமும் மறைத்து விட்டானே’’ என்றார்.

விழிப்புணர்வுக்கு தனிப் பிரிவு

மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் கூறியது: விக்னேஷின் செல்போனை கைப்பற்றி சைபர் கிரைம் போலீஸார் விசாரிக்கின்றனர். ‘புளூவேல்’ விளையாட்டு பாதிப்பால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என, முதல்கட்ட விசாரணை யில் ஓரளவுக்கு தெரிந்தாலும், பிரேத பரிசேதனைக்கு பின்னரே, முழுமையாக தெரியவரும். இருப்பினும், விபரீதமான இந்த விளையாட்டை தடுக்க, மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்கென தனிப்பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படும். இதன்மூலம் மாணவர்கள், இளைஞர்களுக்கு இதன் பாதிப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கப்படும். கல்வி நிலையங்களில் ஒரு மாணவரின் செயல்பாட்டை ஆசிரிய ராலும், நண்பர்களாலும் கண்காணிக்க முடியும். இது போன்ற ஆன்லைன் கேம் ஷோக்களில் யாராவது ஈடுபடுவது தெரிந்தால் உடனே போலீஸ் கவனத்திற்கு கொண்ட வர வேண்டும். பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கலாம். இது தொடர்பாக ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படும். தினமும் பிள்ளைகளின் செயல்பாடுகள் பற்றி பெற்றோரின் கண்காணிப்பு தற்போதைய சூழலில் மிகவும் அவசியமாகிறது. இதில் அவர்கள் கவனமாக இருக்கவேண்டும்,’’ என்றார்.

தனிப்படை விசாரிக்கும்

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கூறியதாவது:

மாணவர் விக்னேஷ் தற்கொலைக்கு ‘புளூவேல் சேலன்ஜிங் கேம்’ என்ற செயலியை தனது கைபேசியில் பதிவிறக்கம் செய்து விளையாடியதால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிகிறது. இது தொடர்பாக ஆஸ்டியன்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து, அதன் புலன் விசாரணையை கடுமையான குற்றங் களை விசாரிக்கும் சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பரமேஸ்வரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவருக்கு உதவியாக தொழில்நுட்ப பிரிவு எஸ்ஐக்கள் மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். செயலி குறித்தும், அதன் பின்னணி குறித்தும் விசாரிக்கப்படும்.

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலாவதி மேற்பார்வையில் ஒவ்வொரு காவல் உட்கோட்டத் திலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த விபரீதமான விளையாட்டு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தி ஆலோசனைகள் வழங்கப்படும். இது போன்ற தவறான விளையாட்டை தங்களது வீட்டிலுள்ள எவரேனும் கைபேசியில் செயலியை பதிவிறக்கும் செய்து விளையாடுவது தெரிந்தால் 77088 06111 என்ற வாட்ஸ் ஆப் நம்பரில் எனக்கு தகவல் தெரிவிக்கலாம், என்றார்.

சாவதற்கு ஆசைகாட்டும் ரகசிய விளையாட்டு

மதுரையை சேர்ந்த உளவியல் ஆலோசகர் பி. ராஜசவுந்தரபாண்டியன் கூறுகையில், ரஷ்யாவில் உளவியல்பட்டம்படித்த பிலிப்(22) என்ற மாணவர்தான் இந்த ‘ப்ளூவேல்’(BLUE WHALE) விளையாட்டை உருவாக்கியவர். 2013-ல் இருந்து ஆன்லைனில் இந்த விளையாட்டுகள் விளையாட ஆரம்பித்துள்ளார்கள். இந்த விளையாட்டுக்கான லிங்க் ஆன்லைனிலோ ஸ்மார்ட் போனிலையோ பெற முடியாது. டவுன் லோடு செய்ய முடியாது. 12, 19 வயதுக்காரர்களை குறிவைத்து இந்த விளையாட்டுக்கான ‘லிங்க்’ சமூக வலைத்தளங்கில் அனுப்புகிறார்கள். பொதுவாக இந்த விளையாட்டிற்கான ஆர்வத்தை இந்த விளையாட்டில் ஈடுபடுவோரின் மரணம்தான் ஏற்படுத்துகிறது. அப்படி என்னதான் இந்த விளையாட்டில் இருக்கிறது என்று நினைப்பவர்கள்தான் சிக்குகிறார்கள். இந்த விளையாட்டு ’50 டேஸ், 50 டாஸ்க்(task)’ என்ற அடிப்படையில் தினமும் ஒரு விளையாட்டு கொடுக்கப்படுகிறது. முதலில் எல்லோராலும் செய்யக்கூடிய உளவியல் சார்ந்த சிறுசிறு விளையாட்டைக் கொடுக்கிறார்கள். உதாரணமாக பிளேடால் கையை வெட்டிக் கொள், உதட்டை கடித்துக் கொள், காலை 4 மணிக்கு எழு என்பார்கள். அவர்கள் அனுப்பும் மியூசிக்கை, வீடியோக்களை பார்க்கனும். இப்படி போக போக நாமே நினைத்தாலும் அதிலிருந்து விலக முடியாதபடிக்கு த்ரிலிங்கான விளையாட்டாக கொண்டு சென்றுவிடுவார்கள். வெளியேற நினைத்தால் மிரட்டப்படும் நிலையும் ஏற்படுமாம். இதில் ஒவ்வொரு விளையாட்டையும் முடிக்கும்போது அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு அவர்கள் விளையாட்டை முடித்திற்கான வீடியோ, புகைப்பட ஆதாரங்களை அந்த விளையாட்டின் பொறுப்பாளர்களுக்கு அனுப்ப வேண்டும். இப்படி குறிப்பிட்ட கட்டத்தில் ‘ஐ எம் ஏ ப்ளூவேல்’ என ஸ்டேட்ஸ் போட வைப்பார்கள். கடைசி 50வது நாள், 50 விளையாட்டி தற்கொலை என்பதுதான் இந்த விளையாட்டின் இறுதிவடிவம். தீவிரவாதிகள் எப்படி மக்களோடு மக்களாக ஸ்லீப்பர் செல்லாக இருப்பதற்கு மூளைச்சலவை செய்து உருவாக்கப்படுகிறார்களோ அதுபோல், இந்த விளையாட்டு ஈடுபடுவோரையும் உருவாக்குகிறார்கள். இந்த விளையாடும் நபர்கள், நண்பர்களையும், பெற்றோரையும் தவிர்க்க ஆரம்பிப்பார்கள். தனியாகவே இருப்பார்கள். வீட்டை விட்டு போக வேண்டும் என்றும், சாக வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தும். தூங்குவதிலும், சாப்பிடுவதிலும் மாற்றம் வரும். பெற்றோர்தான் இந்த மாற்றங்களை கண்காணிக்க வேண்டும். இதை தவிர்க்க பள்ளி செல்வோராக இருந்தால் அவர்களை தங்கள் கண்முன்னே கணிணி, ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டும். கல்லூரி மாணவர்களாக இருந்தால் அவர்களை கண்காணிக்க வேண்டும், ’’ என்றார்.

பள்ளிகள் எச்சரிக்கை

மதுரையில் புளூவேல் விபரீத விளையாட்டிற்கு மாணவர் விக்னேஷ் பலியான தகவல் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், நிர்வாகத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் ஆட்சியர் அறிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று மதியம் முதலே மதுரையில் செயல்படும் பல பள்ளிகளிலிருந்து பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதில், புளூவேல் என்ற ஆன்லைன் விபரீத விளையாட்டு குறித்து விழிப்புடன் இருங்கள். தங்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கச் செய்வதுடன், விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x