Published : 19 Mar 2023 06:25 AM
Last Updated : 19 Mar 2023 06:25 AM
சென்னை: தமிழகத்தை பசுமைப் பொருளாதாரம் மற்றும் குறைந்த செலவில் மாற்று பசுமை எரிபொருளுக்கான முதலீட்டு மையமாக மேம்படுத்தும் `எத்தனால் கொள்கை 2023'-ஐ முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழ்நாடு எத்தனால் கொள்கை 2023’, ‘தமிழ்நாடு நகர எரிவாயு விநியோகக் கொள்கை 2023’, `தமிழ்நாடு சரக்குப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்துத் திட்டம் 2023’ மற்றும் ‘தமிழ்நாடு தொழில்நுட்ப ஜவுளி, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து செயற்கை இழை நூல், செயற்கை இழை துணி மற்றும் ஆடை தயாரிப்புகளுக்கான சிறப்புத் திட்டம்’ ஆகியவை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தொழில் துறைச் செயலர் ச.கிருஷ்ணன், கூடுதல் செயலர் ம.பல்லவி பல்தேவ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன், வழிகாட்டி நிறுவன செயல் இயக்குநர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எத்தனால் கொள்கை: தமிழகத்தை பசுமை பொருளாதாரம் மற்றும் குறைந்த செலவில் மாற்று பசுமை எரிபொருளுக்கான முதலீட்டு மையமாக மேம்படுத்துதல் இக்கொள்கையின் நோக்கமாகும். எத்தனால் கலந்த பெட்ரோல் மூலம் வாகனங்கள் வெளியேற்றும் புகை உமிழ்வு வெகுவாகக் குறைந்து சுகாதாரம் பேணப்படும்.
மேலும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனில் மறுமலர்ச்சி ஏற்பட்டு, சர்க்கரை ஆலைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்பு கொள்முதல் தொகையை தாமதமின்றி வழங்க முடியும். கரும்பு, மக்காச்சோளம் போன்றவற்றைப் பயிரிடும் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.
எரிபொருள் இறக்குமதியில் வெளிநாடுகளை சார்ந்து இருப்பது குறைந்து, இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். இக்கொள்கை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
எரிவாயு விநியோக கொள்கை: சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை எரிவாயுவின் உபயோகத்தை ஊக்கப்படுத்தவும், அதற்கான உட்கட்டமைப்பை தமிழகத்தில் விரைவாக அமைக்கத் தேவையான விதிகள், நடைமுறைகளை உருவாக்கவும் இக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலைகள், வாகனப் பயன்பாடு மற்றும் 2.30 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்க இக்கொள்கை மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 8 ஆண்டுகளில் ரூ.35,000 கோடி முதலீடு கிடைக்கும் எனவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகர எரிவாயு விநியோக உட்கட்டமைப்பை விரைவாக உருவாக்குவதை உறுதி செய்தல், இயற்கை எரிவாயு பயன்பாட்டைப் ஊக்குவிக்கத் தேவையான விதிகள், ஒழுங்குமுறைகளை உருவாக்குதல், மீன்பிடிக் கப்பல்கள் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் திரவ இயற்கை எரிவாயுவை எரிபொருளாக ஏற்றுக்கொள்ள ஊக்குவித்தல் ஆகியவை இக்கொள்கையின் நோக்கமாகும்.
சரக்கு போக்குவரத்து கொள்கை: மாநிலத்தின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், தொலைநோக்குப் பார்வையுடன் இக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. வலுவான போக்குவரத்து உட்கட்டமைப்பை உருவாக்குதல், குறைந்த செலவில், உயர்ந்தசேவை கிடைக்கும் நிலையை ஊக்குவித்தல், ஒற்றைச்சாளர அனுமதியை உருவாக்குதல், புதிய தொழில்நுட்ப உத்திகளைச் செயல்படுத்தல் உள்ளிட்டவை இக்கொள்கையின் அம்சங்களாகும்.
சரக்கு போக்குவரத்து செயல் திட்டம் மூலம் 3 பெருவழி தடங்களில், 50 செயல்திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.63,000 கோடி அளவுக்கு செயல் திட்டங்களும், 1.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படும்.
ஆடை தயாரிப்பு திட்டம்:ஆடை தயாரிப்பு சிறப்புத் திட்டம், தொழில்நுட்ப ஜவுளி, செயற்கை இழை நூல் மூலம் சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், ஆடை உற்பத்தியில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், ஆராய்ச்சி மற்றும் முதலீடுகளை ஊக்குவித்தல், அனைத்து மாவட்டங்களிலும் சமச்சீரான தொழில் மேம்பாடு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment