Published : 25 Sep 2017 10:03 AM
Last Updated : 25 Sep 2017 10:03 AM

பராமரிப்புக்காக ஆண்டுக்கு ரூ.85 லட்சம் செலவாகிறது; நிதி நெருக்கடியை சமாளிக்க தீர்மானத்தை ரத்து செய்யும் மாநகராட்சி: சமுதாயநலக் கூடங்களை இலவசமாக பயன்படுத்த இயற்றப்பட்டது

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்க, அதன் வசம் உள்ள சமுதாயநலக் கூடங்களை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த இயற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெற்ற வரவு செலவு திட்ட மாமன்ற கூட்டத்தில், அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, மாநகராட்சி பராமரிப்பில் உள்ள 47 சமுதாயநலக் கூடங்கள், இனி வரும் காலங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக, இலவசமாக வழங்கப்படும் எனவும், பராமரிப்பு தொகை மட்டும் பயனாளிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும், அப்போதையை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி அறிவித்திருந்தார். அதற்கு மன்ற அனுமதி அளித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அண்மைக் காலமாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க கூட, வங்கியில் ‘ஓவர் டிராப்ட்’ முறையில் கடன் பெற்று தான் வழங்க வேண்டியுள்ளது. அம்மா உணவக செலவினங்களும் பல கோடி ரூபாயாக உயர்ந்து வருகிறது. குப்பை அகற்றும் வாகனங்களுக்கு டீசல் நிரப்பவும் சிரமமாக உள்ளது. அதன் காரணமாக, சமுதாய நலக்கூடங்களை இலவசமாக வழங்கும் அறிவிப்பு இதுவரை அமல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், சமுதாய நலக்கூடங்களில் பொதுமக்களின் இல்ல நிகழ்ச்சிகளை இலவசமாக நடத்திக்கொள்ள இயற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான கருத்துருவை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலருக்கு அனுப்பியுள்ளது.

அதிகாரி விளக்கம்

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நிதி நெருக்கடியால், சமுதாய நலக்கூடங்களை இலவசமாக வழங்கும் தீர்மானத்தை செயல்படுத்த முடியவில்லை. அந்த கூடங்களை பராமரிக்க ஆண்டுக்கு ரூ.85 லட்சம் செலவாகிறது. அதனால், இந்த கூடங்களை முறையாக பராமரிக்கவும், கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், அக்கூடங்களை பயன்படுத்துவோரிடம் இருந்து வாடகை வசூலிக்க வேண்டியது அவசியமாகிறது. மாநகராட்சி வசூலிக்கும் தொகையானது, தனியார் கல்யாண மண்டபங்களில் வசூலிக்கும் தொகையை விட மிக மிக குறைவானது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட, சென்னை மாநகராட்சிக்கு செலவே இல்லாத, ‘அம்மா வாரச்சந்தை’ திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட, சமுதாயநலக் கூடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x