Published : 18 Mar 2023 06:39 AM
Last Updated : 18 Mar 2023 06:39 AM
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் இளைஞரின் மார்பில் குத்திய மரக்கட்டையை அகற்றி உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
சென்னையை சேர்ந்தவர் ஸ்ரீதர் (27). டிப்பர் லாரி ஓட்டுநர். கடந்த 5-ம் தேதி காலை 2.20 மணி அளவில் சாலையில் ஆட்டோகவிழ்ந்ததில், அவரது வலதுமார்பு பகுதியில் ஒரு மரக்கட்டைகுத்தியது. முதுகுப் பகுதி வரை ஊடுருவியிருந்த கட்டையுடன் அவர் கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்கட்ட சிகிச்சைக்குப் பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக அதிகாலை 5.50 மணிக்குராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பரிசோதனையில் மரக்கட்டை குத்தியதால் அவரது வலதுநுரையீரலின் கீழ் பகுதி சேதமடைந்திருப்பது தெரியவந்தது. மருத்துவமனை டீன் தேரணிராஜன் உத்தரவின்பேரில், இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சைத் துறைபேராசிரியர் டாக்டர் நந்தகுமார் அறிவுறுத்தலின்படி டாக்டர்கள் செந்தில், அஜய் நரசிம்மன் ஆகியோர் கொண்ட குழுவினர் 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து மரக்கட்டையை வெளியே எடுத்தனர்.
சேதமடைந்திருந்த வலது பக்க நுரையீரலின் கீழ் பகுதியை அகற்றினர். சிகிச்சைக்குப் பின் நலமடைந்துள்ள இளைஞர் சில தினங்களில் வீடு திரும்ப உள்ளார். விரைவாகச் செயல்பட்டு இளைஞரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை டீன் தேரணிராஜன் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT