Published : 30 Sep 2017 08:18 AM
Last Updated : 30 Sep 2017 08:18 AM
சுற்றுலா நட்பு வாகன திட்டத்துக்கு வெளிநாடு, வெளி மாநில சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பு இருந்தும் போதிய கவனம் செலுத்தப்படாததால் இத்திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை மீண்டும் புதுப்பிக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது.
தமிழக சுற்றுலாத் துறையால் ‘சுற்றுலா நட்பு வாகனம்' எனும் திட்டம் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுற்றுலா நட்பு வாகன திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, சுற்றுலாத் தலங்கள் குறித்தும், தகவல் தொடர்பு, உடல்மொழி போன்றவை தொடர்பாகவும் பயிற்சிகள் அளிக்கப் பட்டன.
இதுதவிர, சுற்றுலாப் பயணிகளுக்கு விநியோகிக்க சுற்றுலா வரைபடங்கள், கையேடுகளும் வழங்கப்பட்டன. சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, ராமேசுவரம் ஆகிய இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் இணைக்கப்பட்ட ஆட்டோக்கள் போக்குவரத்துத் துறையின் ஒப்புதலுடன் சுற்றுலாத் தலங்களின் புகைப்படங்களால் அலங்கரிக்கப்பட்டன. மற்ற ஆட்டோக்களில் இருந்து வித்தியாசப்படும் வகையில் நிறத்தை பயன்படுத்திக்கொள்ள அந்த வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
சென்னையில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், 5 நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டு பயணிகள் மட்டுமின்றி, பிற மாநில பயணிகள் மத்தியிலும் வரவேற்பை பெற்றிருந்த இத்திட்டம் கடந்த 6 ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாததால் தற்போது மிகச் சில சுற்றுலா நட்பு வாகன ஆட்டோக்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.
இதுகுறித்து சுற்றுலா நட்பு வாகன திட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், ஓட்டுநருமான புருஷோத்தமன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமிழகம் வந்ததும் முதலில் அவர்கள் எதிர்கொள்வது ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்களைத்தான். அப்போது அவர்களுக்கு ஏற்படும் அனுபவத்தை வைத்தே, நம் மாநிலத்தைப் பற்றி அவர்கள் மதிப்பீடு செய்கின்றனர். எனவேதான், சுற்றுலா நட்பு வாகன திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், ‘விருந்தினர் போற்றுதும்.. விருந்தினர் போற்றுதும்..’ என்ற தலைப்பின் கீழ் போக்குவரத்து காவலர்கள், கோயில் அர்ச்சகர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள், போர்ட்டர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியோர் சுற்றுலாப் பயணிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தனர். இதனால் சுற்றுலாவை பிரபலப்படுத்துவதில் எங்களுக்கும் பங்கு இருந்தது.
ஆட்டோ ஓட்டுநர்களும் வெளி நாடு மற்றும் பிறமாநில பயணிகளை வரவேற்று, நியாயமான வாடகையில் சுற்றுலாத் தலங்களை சுற்றிக் காட்டினர். இப்போதும்கூட வெளியூர் பயணிகள் பலர் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் தமிழகம் வரும்போது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல எங்களை அழைக்கின்றனர். ஆனால், தமிழக சுற்றுலாத் துறை இந்த திட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக கண்டுகொள்ளாததால் பல ஆட்டோ ஓட்டுநர்கள் இத்திட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டனர். முன்பு சென்னையில் மட்டும் 113 சுற்றுலா நட்பு ஆட்டோக்கள் இருந்தன. தற்போது சுமார் 25 ஆட்டோக்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.
பயணிகளிடையே இன்றளவும் வரவேற்பு இருப்பதால் இத்திட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் அளித்து கூடுதல் ஆட்டோக்களை இயக்க தமிழக சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, இத்திட்டம் குறித்து சுற்றுலாப் பயணிகளிடையே விளம்பரப்படுத்தினால் நிச்சயம் சுற்றுலா வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT