Published : 24 Sep 2017 07:11 AM
Last Updated : 24 Sep 2017 07:11 AM
நக்ஸலைட், மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் உள்துறை அமைச்சகம், கூடுதல் கவனம் செலுத்தி வருவதால், கடந்த ஆண்டில் 40 சதவீத வன்முறைச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் முதுநிலை பாதுகாப்பு ஆலோசகர் கே.விஜயகுமார் தெரிவித்தார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் படைக்கு தலைமை வகித்து, வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளை சுட்டுக்கொன்ற ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கோவைக்கு நேற்று வந்தார். அப்போது, ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிஸா மாநிலங்களில் மாவோயிஸ்ட், நக்ஸலைட் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். அதேபோல, மூன்று மாநில வனப் பகுதிகள் இணையும் இடங்களில், தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. குறிப்பாக, தமிழ்நாடு-கேரளா-கர்நாடகா, ஒடிஸா-ஆந்திரப்பிரதேசம்-சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம்-மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர், பிஹார்-ஜார்க்கண்ட்-சத்தீஸ்கர் என மூன்று மாநில எல்லைப் பகுதிகள் இணையும் வனம், மலைப் பகுதிகளில், மாவோயிஸ்ட், நக்ஸலைட்டுகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதனால், 2015-16-ம் ஆண்டில் 40 சதவீத வன்முறைச் சம்பவங்கள் குறைந்துள்ளன. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற தாக்குதல்களில் சுமார் 40 வீரர்களை இழந்துள்ளோம். அதேசமயம், மாவோயிட்ஸ்களுக்கு எதிராகவும் பெரிய தாக்குதல்களை மேற்கொண்டோம்.
தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் பயன்கள், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கிடைக்கிறது. இதில், ஒரே நாளில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கக் கூடாது. சீரான வளர்ச்சியே சரியானதாக இருக்கும்.
மேலும், தீவிரவாதத்தை ஒழிக்க, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய 2 வழிகளிலும் உரிய முயற்சிகளை மேற்கொள்கிறோம். வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள் மூலம், தீவிரவாதக் குழுக்களை ஆயுதங்களை கைவிடச் செய்வதும் எங்களது நோக்கமாகும். அதற்கான செயல்திட்டங்களும் ஒருபுறம் நிறைவேற்றப்படுகின்றன. உள்நாட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் பிரச்சினைகள் மீதும் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களது பணிச்சுமை, மனஉளைச்சல், நெருக்கடி ஆகியவற்றையும் கவனத்தில்கொண்டு உரிய தீர்வு காணப்படுகிறது.
அதேபோல, நவீன ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தும் தீவிரவாதக் குழுக்களை சமாளிக்கும் வகையில், வீரர்களுக்கும் நவீன ஆயுதங்கள், கண்காணிப்புக் கருவிகள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைகளும் அதிநவீனமயமாக்கப்பட்டு வருகின்றன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT