Published : 18 Mar 2023 06:13 AM
Last Updated : 18 Mar 2023 06:13 AM
சிவகங்கை: புகார்களை இணையதளம் வாயிலாக அளிக்கலாம் என தமிழக டிஜிபி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலையில், காவல்துறை இணையதளத்தில் ஒரு வாரமாக புகார்களை பதிவு செய்யும் பகுதி முடக்கப்பட்டுள்ளது. இதனால், புகார்தாரர்கள் மீண்டும் காவல் நிலையங்களுக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக காவல் நிலையங்களில் புகார்தாரர்கள் அலைக்கழிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், காவல்துறை இணையதளத்தில் புகார்களை பதிவு செய்யும் பகுதிஏற்படுத்தப்பட்டது. இதில் புகார்தாரர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது புகார்களை பதிவு செய்ய முடியும். புகாருக்கான ரசீது உடனடியாக கிடைத்துவிடும்.
மேலும் போலீஸாரும் புகார்களை கிடப்பில் போடாமல் உடனுக்குடன் விசாரணையை தொடங்கிவிடுவர். இதனால் நாளுக்குநாள் இணைய வழியாக புகார் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இணையதளம் மற்றும் காவல் துறை செயலியில் மக்கள் புகார் செய்யலாம் என செல்லும் இடமெல்லாம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழக காவல்துறை இணையதளத்தில் புகார்களைப் பதிவு செய்யும் பகுதி முடக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் புகார்தாரர்கள் காவல் நிலையங்களுக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வழக்கறிஞர் மணல்மேடு ராஜா கூறியதாவது: ஆவணங்கள் தொலைந்தது முதல் கொலை, கொள்ளை, பாலியல், ஆள் கடத்தல் வரை அனைத்துப் புகார்களையும் இணையவழியாகவே கொடுக்க முடியும்.
காவல்நிலையங்களில் புகார்களைக் கொடுத்தால் உடனடியாக சிஎஸ்ஆர் கொடுப்பதில்லை. ஆனால், இணையதளத்தில் உடனுக்குடன் ரசீது கிடைத்துவிடும். இதனால் பலரும் இணையதளம் வழியே புகார்களை அளிக்கின்றனர்.
ஆனால், கடந்த ஒரு வாரமாக புகார்களைப் பதிவு செய்யும் பகுதியில் புகார்தாரர் விவரம், சம்பவ விவரங்களை ‘டைப்’ செய்தபிறகு ‘ரிஜிஸ்டர்’ பகுதியை ‘கிளிக்’ செய்தால், பதிவாகாமல் மீண்டும் பழைய இடத்துக்கே வந்துவிடுகிறது. இதனை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT