Last Updated : 17 Mar, 2023 11:05 PM

 

Published : 17 Mar 2023 11:05 PM
Last Updated : 17 Mar 2023 11:05 PM

இருதய நோயால் பாதிக்கப்பட்ட பெருநாழி சிறுவன் - முதல்வரிடம் உதவிகேட்ட 24 மணி நேரத்திற்குள் தேடிவந்த அதிகாரிகள்

பெற்றோர்களுடன் சிறுவன் கஜன்.

ராமநாதபுரம்: கமுதி அருகே பெருநாழியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் இருதய நோய் சிகிச்சைக்கு முதல்வர் உதவி செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்ட 24 மணி நேரத்தில் சுகாதாரத்துறையினர் வீட்டிற்கு வந்து சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருநாழி சண்முகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரஞ்சித், சரண்யா தம்பதியினர். இவர்களுக்கு கஜன் (4) என்ற மகன் உள்ளார். சிறுவன் கஜனுக்கு இதயத்தில் துளை மற்றும் இதயத்திற்கு வந்து செல்லும் ரத்தம் மாற்று குழாயில் செல்லும் பிரச்சினை இருந்து வருகிறது. கஜனை பரிசோதித்த மருத்துவர்கள் 5 வயதிற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். இதயத்துளை அடைப்பு அறுவை சிகிச்சைக்கு ரூ.7 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தையின் முதல் சிகி்ச்சைக்காக பணத்தை செலவிட்டு வந்த நிலையில் தற்போது அறுவை சிகிச்சை செய்ய போதிய பண வசதி இல்லாமல் சிறுவனின் பெற்றோர் கஷ்டப்படுகின்றனர். இதுகுறித்து அந்தச் சிறுவன் பெற்றோரின் கைபேசி மூலம் நேற்று சமூக வலைதளங்கில் வீடியோ வெளியிட்டார்.

அதில் அச்சிறுவன், "என் பெயர் கஜன், பெருநாழியில் இருக்கேன், இருதய நோயால் பாதிக்கப்பட்ட எனது சிகிச்சைக்கு முதல்வர் ஸ்டாலின் ஐயா உதவி செய்து காப்பாற்ற வேண்டும். அம்மா, அப்பாவிடம் காசு இல்லை" என தனது இரு கைகளால் வணங்கியவாறு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த மழலை வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் எம்எல்ஏவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான ராஜ கண்ணப்பன், மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை தொடர்பு கொண்டு, சிறுவன் சிகிச்சைக்கு உதவிட கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் இன்று பரமக்குடி சுகாதாரத் துறை துணை இயக்குநர் பிரதாப் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறுவனின் வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்தனர். மேலும் கமுதி வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா உள்ளிட்ட வருவாய்த்துறையினரும் நேரில் சென்று விசாரணை செய்தனர். சுகாதாரத்துறையினர் அரசு வாகனத்தில் சிறுவன், அவனது பெற்றோரை அழைத்துக் கொண்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து துணை இயக்குநர் பிரதாப்குமார் கூறும்போது, "அரசு உத்தரவின்பேரில் சிறுவனுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட உள்ளது. முதலில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் இருதய பிரிவு மருத்துவ நிபுணர்களால் பரிசோதனை செய்யப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்லப்படுவார்" என்றார்.

அமைச்சர் நிதியுதவி: அமைச்சர் ராஜ கண்ணப்பன் சார்பாக அவரது உதவியாளர் சிறுவன் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை செல்வதற்கு, தங்குவதற்கு உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ. 25,000-ஐ சிறுவனின் பெற்றோரிடம் வழங்கினர். மேலும் சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரின் உதவியாளர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x