Published : 17 Mar 2023 11:54 PM
Last Updated : 17 Mar 2023 11:54 PM

மதுரை மேயர் - துணை மேயர் மோதல் முற்றுகிறது: கல்வெட்டில் பெயர் போடாததால் போராட்டம் என ஆணையருக்கு கடிதம்

மதுரை: ‘‘மதுரை மாநகராட்சியில் வைக்கப்படும் கல்வெட்டுகளில் என பெயர் விடுபடுகிறது. அந்த கல்வெட்டுகளை மாற்றி எனது பெயர் வைக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை மாநகராட்சி துணை மேயர் மாநகராட்சி ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி இருப்பதால் திமுக கூட்டணிக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சியில் மேயராக திமுகவை சேர்ந்த இந்திராணி மேயராக உள்ளார். துணை மேயராக திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாகராஜன் உள்ளார். ஆரம்பத்தில் மேயரும், துணை மேயரும் இணக்கமாகவே மாநகராட்சி நிர்வாகப் பணிகளில் செயல்பட்டனர். ஒன்றாக மாநகராட்சி விழாக்களில் கலந்து கொண்டனர்.

ஆனால், சமீப காலமாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. துணை மேயர், மாநகராட்சி விழாக்கள் முதல் நிர்வாகப் பணிகள் வரை மேயர் தரப்பினர் தன்னை புறக்கணிப்பதாக மாநகராட்சி கூட்டத்திலே பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்தார். அதற்கு மேயர் தரப்பினர், துணை மேயருக்கு நிர்வாகப் பணிகளில் தலையீடுவதற்கு அதிகாரமில்லை, அவரும் ஒரு கவுன்சிலரே என்று பதிலடி கொடுத்தனர். அதனால், இரு தரப்பிற்குமான மோதல் முற்றிவரும்நிலையில் தற்போது துணை மேயர் நாகராஜன் மாநகராட்சி ஆணையாளளருக்கு பரபரப்பு கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், "கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை மாநகராட்சி 5வது மண்டல அலுவலகத்தில் சுதந்திர தின விழா அன்று வைக்கப்பட்ட கல்வெட்டில் எனது பெயர் விடுப்பட்டதை தங்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தினேன். பலமுறை நேரிலும் தங்களிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தொடர்ந்து வலியுறுத்தினேன். எனது பெயர் சேர்க்கப்பட்ட கல்வெட்டு எனது முயற்சியின் மூலம் புதிதாக தயார் செய்ய முயற்சித்தேன். அதை வைக்க விடாமல் சிலர் தடுத்தனர்.

இன்று 17ம் தேதி(நேற்று)29வது வார்டில் நடைபெற்ற புதயி அங்கன்வாடி மையம் திறப்பு விழாவில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டிலும் எனது பெயர் மட்டும் இடம்பெறாமல் மேயர் ஆணையாளர், மண்டலத்தலைவர் மற்றும் கவுன்சிலர் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது. அதனால், ஏதோ திட்டமிட்டு எனது பெயர் வைக்கப்படாமல் உள்ளதாக தெரிகிறது. ஒரிரு நாளில் இந்த இரண்டு கல்வெட்டுகளையும் மாற்றி எனது பெயர் சேர்க்கப்பட்ட கல்வெட்டினை வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிட்டால் வரும் 21ம் தேதி அன்று 5வது மண்டலத்தில் நடக்க உள்ள மக்கள் குறைதீர் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் முன்னலையில் நான் போராட்டத்தில் ஈடுபடுவேன்"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நாகராஜனிடம் கேட்டபோது, ‘‘ஆமாம் கடிதம் அனுப்பி உள்ளேன். புரோட்டகால் படி மேயர் பெயர் போட்ட கல்வெட்டுகளில் துணை மேயர் போட வேண்டும். திட்டமிட்டே நான் புறக்கணிக்கப்படுறேன். மாநகராட்சி ஆணையாளர் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் செய்வேன்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x