Published : 17 Mar 2023 09:59 PM
Last Updated : 17 Mar 2023 09:59 PM
அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் அதிமுகவில் நடந்த அரசியல் சார்ந்த நகர்வுகளை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
'ஒற்றைத் தலைமை' சலசலப்பு: 2019-ல் நடைபெற வேண்டிய அதிமுக அமைப்பு தேர்தல் கரோனாவால் தள்ளிப்போனது. இதையடுத்து, 2021ஆண்டு டிசம்பரில் பதவி வாரியாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி மற்றும் படிப்படியாக மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டும். பின்னரே, தேர்தல் ஆணையத்தில் அதை சமர்ப்பிக்க முடியும். இதையொட்டி, அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் 2022ம் ஆண்டு, 23-ம் தேதி சென்னையில் நடைபெற இருந்தது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரம் அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு: அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சையால் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இரு அணிகளாக பிரிந்தனர். ஜூன் 23ம் தேதி நடைபெறவிருந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த அனுமதியளித்து தனிநீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், பொதுக்குழுவை நடத்தலாம். ஆனால், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம். மற்றவை குறித்து முடிவெடுக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது.
ஜூலை 11ல் மீண்டும் பொதுக்குழுக் கூட்டம்: ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுக்கூட்டத்தில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கலந்துகொண்டனர். கட்சியின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அவரிடம் 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவை சி.வி.சண்முகம் வழங்கினார். இதனை ஏற்று 2022ம் ஆண்டு ஜூலை 11ல் மீண்டும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் இருந்து வெளியேறினர்.
இபிஎஸ் தேர்வு: ஜூலை 11-ம் தேதி நடைபெற இருந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை பிறப்பித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ச்சியாக நடைபெற்றது.
பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு: இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைநந்த நிலையில், கடந்த மாதம் 23ம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு: இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர், கட்சியிலிருந்து தங்களை நீக்கி நிறைவேற்றப்பட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில், இபிஎஸ் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு வந்து எட்டு மாதங்களுக்குப்பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு செல்லாததாகி விட்டது. எனவே, வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பு: இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச் 18) முதல் தொடங்கும் என்றும் அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
> மார்ச் 26-ல் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்; மார்ச் 27-ல் வாக்கு எண்ணிக்கை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT