Published : 17 Mar 2023 04:51 PM
Last Updated : 17 Mar 2023 04:51 PM
சென்னை: “பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை பயன்படுத்தி சில தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டு உள்ளது. பால் விற்பனை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து நடைபெறும்” என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும், இன்று (மார்ச்17) முதல் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து நேற்று (மார்ச் 16) பால் வளத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி இன்று முதல் போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர் நல சங்கம் அறிவித்தது. இதன்படி பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பால் வாங்குவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், தமிழகம் முழுவதும் ஆவின் பால் விற்பனை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து நடைபெறும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "17.3.2023 அன்று காலை, கிராமப்புற பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் தொய்வின்றி நடைபெற்றது. ஒரு சில பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை தவிர இதர சங்கங்களில் வழக்கமான அளவிற்கு பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கினார்கள்.
ஆவின் மற்றும் பால் வளத்துறையின் கள அலுவலர்கள் சங்கங்களில் முழுவீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பால் நிறுத்த போராட்டத்தை பயன்படுத்தி சில தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் செய்ய மேற்கொள்ளப்பட்ட போதிலும் அம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆவின் பால் விற்பனை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து நடைபெறும். இதுகுறித்து வரும் வதந்திகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT