Published : 17 Mar 2023 04:31 PM
Last Updated : 17 Mar 2023 04:31 PM

“தடையாக இருக்கிறார் தலைமைச் செயலர்” - புதுச்சேரி பேரவையில் காரசார விவாதம்

புதுச்சேரி: ‘புதுச்சேரியில் உள்ளூர் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு தலைமைச் செயலர் தடையாக உள்ளார். முதல்வர் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுக்கப்படும். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் முடியும் முன்பே கூட்டம் நடத்தப்படும்’ என்று அம்மாநிலப் பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிகாரிகள் காலிப் பணியிடம் தொடர்பாக கடும் விவாதம் நடந்தது. அதன் விவரம்:

நேரு (சுயேட்சை): “புதுச்சேரியில் வட்டாட்சியர் பணியிடங்கள், விஏஓ பணியிடங்கள் காலியாக உள்ளன. தாசில்தார் பணியிலேயே சிடிசி என்ற அடிப்படையில் எத்தனை பேர் பிசிஎஸ் அதிகாரிகளாக உள்ளனர்?”

முதல்வர் ரங்கசாமி: “பணியிடங்கள் காலியாக உள்ளது. முழுவதுமாக நிரப்ப எண்ணம். இந்த ஆண்டுக்குள் அத்தனை பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அதிகாரம் இல்லாமல் இருக்கும் சூழலும் உள்ளது.”

மேஷ் (என்.ஆர்.காங்): “யார் தடுப்பது?“

நாஜிம் (திமுக): “முதல்வர் தெளிவான முடிவை தெரிவிக்க வேண்டும். இதில் தலைமைச் செயலர் முக்கியக் காரணம். துணை நிலை ஆளுநர் நினைத்தால் முடியும். ஆனால். அவர் செய்வதில்லை.”

ஜான்குமார் (பாஜக): “மாநில அந்தஸ்துதான் இதற்கு ஒரே வழி.

நேரு: “தனி மாநில அந்தஸ்து தேவை. அதிகாரிகள் கொட்டத்தை அடக்க வேண்டும்.”

முதல்வர் ரங்கசாமி: “முன்பிருந்த தலைமைச் செயலர் செயல்பாட்டால் இத்தவறு தொடர்கிறது. பதவி உயர்வு தருவதில்லை. இந்நிலை மாற வேண்டும்.”

ரமேஷ்: “உள்ளூர் அதிகாரிகள் பழிவாங்கப்படுகிறார்கள். தடுக்கும் தலைமை செயலர், செயலர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.”

நாஜிம்: “நீங்கள் பரிதாப்பட்டு விட்டுவிடுகிறீர்கள். மத்திய உள்துறை புதுச்சேரி அதிகாரிகளின் பதவி உயர்வை மாநில அரசே நிர்ணயிக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய தேர்வாணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதை செய்ய வேண்டியது தலைமை செயலாளர்தான். ஆனால். கடந்த காலத்தில் பல இடையூறுகளை செய்த ஆளுநர் கிரண்பேடி கூட இதற்கு சம்மதித்தார். தற்போதைய ஆளுநர் சிரித்துக்கொண்டே செய்வதில்லை.”

ராமலிங்கம்: “முதல்வர் தலைமையில் டெல்லி சென்று தடையை நீக்குவோம்.”

நேரு: “பொதுப்பணித் துறையில் கண்காணிப்பு பொறியாளர் பொறுப்பில் உள்ளவர்கள் உதவி பொறியாளர்கள் சம்பளத்தை பெறுகின்றனர். அந்த நிலையிலேயே ஓய்வுபெறுகின்றனர்.”

முதல்வர் ரங்கசாமி: “இந்த நிலை மாற வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம்.”

பேரவைத் தலைவர் செல்வம்: “புதுச்சேரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைக்க சில ஐஏஎஸ் அதிகாரிகளே தடையாக உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகால பின்னடைவால் இந்நிலை உருவாக்கியுள்ளது. முன்பு பதவி உயர்வுகள் தரப்பட்ட சூழல் மாறியுள்ளது. தற்போது தலைமைச் செயலர் தடையாக உள்ளார். பரந்த மனப்பான்மையுடன் முதல்வர் செயல்படுவதால் அதிகாரிகள் தங்களுக்கான வாய்ப்பாக கருதுகின்றனர். முதல்வர் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தி ஒரு முடிவெடுக்கப்படும். சட்டமன்ற கூட்டத் தொடர் முடிவடையும் முன்பே கூட்டத்தை நடத்தி முடிவு செய்வோம்.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x