Published : 17 Mar 2023 04:08 PM
Last Updated : 17 Mar 2023 04:08 PM

“ஐ.நா இலக்கை நாம் எப்போதோ எட்டிவிட்டோம்” - மகளிர் காவல் துறை பொன் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னையில் நடந்த மகளிர் காவலர்கள் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியில், சிறப்பு தபால் உறையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

சென்னை: "திமுக ஆட்சியில் பெண்கள், காவலர்கள் தொடங்கி எஸ்பி, டிஐஜி, ஐஜி, காவல் துறை கூடுதல் இயக்குநர், காவல் துறை இயக்குநர் மற்றும் படைத் தலைவர் என எல்லா நிலைகளிலும், தமிழ்நாடு காவல் துறையில் இன்று 35,329 பெண் காவல் ஆளினர்கள் பணியாற்றி வருகின்றனர்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், “நமது காவல் துறையைப் பொறுத்தவரையில், இணைய தொழில்நுட்பத்தை 70 விழுக்காடு பெண்கள்தான் செயல்படுத்துகிறார்கள்” என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

தமிழக காவல் துறையில் 1973-ல் இருந்து பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆண்டு தமிழக மகளிர் காவல் துறைக்குப் பொன்விழா ஆண்டு ஆகும். இதன்படி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை (மார்ச் 17) நடைபெற்ற, தமிழக காவல் துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புத் தபால் உறையினை வெளியிட்டு, 'அவள்' திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் மிதிவண்டித் தொடர் பேரணியை கொடியசைத்துத் துவக்கி வைத்து, பெண் காவலர்களுக்கான 9 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:

  1. ரோல் கால் என்ற காவல் வருகை அணிவகுப்பு 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு நடைபெறும்.
  2. சென்னை மற்றும் மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
  3. அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனி ஓய்வு அறை கட்டித் தரப்படும்.
  4. தேவையான அனைத்து இடங்களிலும் காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்.
  5. கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும் ஆண்டு தோறும் வழங்கப்படும்.
  6. பெண் காவலர்கள் குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப விடுப்பு மற்றும் பணியிட மாறுதல் வழங்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்படும்.
  7. பெண் காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும்.
  8. பெண் காவலர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண காவல் துறையில் பெண்கள் என்ற தேசிய மாநாடு ஆண்டு தோறும் நடத்தப்படும்.
  9. பெண் காவலர்களின் நலனுக்காக பணி ஆலோசனை வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும்.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "திமுக ஆட்சியில் பெண்கள், காவலர்கள் தொடங்கி எஸ்பி, டிஐஜி, ஐஜி, காவல்துறை கூடுதல் இயக்குநர், காவல் துறை இயக்குநர் மற்றும் படைத் தலைவர் என எல்லா நிலைகளிலும், தமிழ்நாடு காவல் துறையில் இன்று 35,329 பெண் காவல் ஆளினர்கள் பணியாற்றி வருகின்றனர். தலைவர் கலைஞர் தொடங்கி வைத்த ஒரு சகாப்தத்தின் ஐம்பதாம் ஆண்டு பொன் விழாவில், அவரது மகனான நான் முதல்வராக வந்து கலந்துகொள்வது எனக்குக் கிடைத்திருக்கக் கூடிய பெரும் பெருமையாக, பெரும் பேறாக நான் கருதுகிறேன். பெண் காவலர், பெண் உதவி ஆய்வாளர், பெண் ஐபிஎஸ் அதிகாரி என காவல் பணியில் சேர்ந்த நிலையில், தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் நேரடி நியமன டிஎஸ்பி. பதவியில் மட்டும் எந்த ஒரு பெண்ணும் பணியில் சேர இயலாத சூழல் இருந்து வந்தது.

இந்நிலையில் 1989-ல் திமுக ஆட்சி அமைந்தபோது, இத்தகைய குரூப்-1 தேர்வு உயர் பதவிகளை பெண்கள் அடைய வேண்டும் என்பதற்காகவே, அரசுப் பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தலைவர் கலைஞர் அன்றைக்கு அமல்படுத்தினார். இதன் விளைவாக, குரூப்-1 தேர்வில் பணியில் சேர்ந்த பெண் அதிகாரிகள் பலர், இன்றைக்குக் கூடுதல் காவல் துறை இயக்குநராகவும், காவல் துறைத் தலைவர்களாகவும், காவல் துணைத் தலைவர்களாகவும், காவல் கண்காணிப்பாளர்களாவும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாகவும், காவல் துணைக் கண்காணிப்பாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

பெண்கள் இன்றைக்குக் காவல் துறையின் அனைத்துப் பிரிவுகளிலுமே அதாவது, சட்டம் - ஒழுங்கு குற்றப்பிரிவு, ரயில்வே துறை, சிபிசிஐடி, போக்குவரத்து, உளவுத் துறை. லஞ்ச ஒழிப்புத் துறை, சிறப்பு காவல் படை, இணைய குற்றப் பிரிவு, கமாண்டோ படை - ஏன்? முதல்வர் பாதுகாப்பு படை என அனைத்துப் பிரிவுகளிலுமே மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.சட்டம் - ஒழுங்கு காவல் நிலையங்களில் உள்ள 1,356 ஆய்வாளர் பணியிடங்களில், 503 காவல் ஆய்வாளர்கள் பெண்கள்தான். அதாவது, சட்டம் - ஒழுங்குப் பாதுகாப்பில் 37 விழுக்காடு பெண் காவல் ஆய்வாளர்கள் திறம்பட நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் பணியாற்றி வருகின்றனர்.

காவல் பணிகளில், நிலைய எழுத்தர், சிசிடிஎன்எஸ் பணி, கணினிப் பிரிவு, நீதிமன்ற அலுவல், காப்புப் பணி, காணாமல் போனவர்களை இணைய உதவியுடன் கண்டறியும் பணி போன்றவற்றில் அளப்பரிய பங்களிப்பினை பெண் காவலர்கள் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு பணியில் சேர்ந்த 21 காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்களில், 17 பேர் பெண்கள் என்றால், தலைவர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையை நம்மால் இன்றைக்கு தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆண்டு ஐ.நா அவை, மகளிர் தினத்தை உலக அளவில், “புதுமைகளும், தொழில்நுட்பமும் பாலின சமத்துவத்தை நோக்கியதாக இருக்க வேண்டும்" (DigitALL: Innovation and Technology for gender equality) என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. இந்த இலக்கை நாம் எப்போதோ எட்டிவிட்டோம்.

நமது காவல் துறையைப் பொறுத்தவரையில், இணைய தொழில்நுட்பத்தை 70 விழுக்காடு பெண்கள்தான் செயல்படுத்துகிறார்கள். காவல் தொழில்நுட்பப் பிரிவில் 140 பெண் உதவி ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர். விரல் ரேகைப் பிரிவில் புதிய தொழில்நுட்பமான நஃபிஸ் (NAFIS) மற்றும் ஃபேக்ட் 7 எனும் புதிய தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தும் விதமாக விரல்ரேகைப் பிரிவில், 72 பெண் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழ்நாடு காவல் துறையின் செயல்பாடுகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான தேவையான பங்களிப்பையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் மூலம் அமைதியான தமிழ்நாடு உருவாக உங்களது பணி உதவி செய்து வருகிறது.குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டுமல்லாமல், குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக நீங்கள் இருக்க வேண்டும். அதற்குப் பெண் காவலர்கள் பெரும் பங்கை ஆற்ற வேண்டும்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x