Published : 10 Sep 2017 02:51 PM
Last Updated : 10 Sep 2017 02:51 PM
தமிழ்நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களின் தகவல்களைத் திரட்டி, இணையதளத்தில் வெளியிட்டு அவர்களை உலகறியச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது ‘பூம்புகார்’ என்றழைக்கப்படும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை கைவினைப் பொருட்கள் விற்பனையில் முன்னிலை வகிப்பது, தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்.
இந்த நிறுவனத்துக்கு, சென்னை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை, மதுரை, கன்னியாகுமரி, மகாபலிபுரம், சுவாமிமலை மற்றும் டெல்லி, கொல்கத்தாவில் விற்பனை நிலையங்கள் உள்ளன.
இதற்காக கும்பகோணம் நாச்சியார்கோயில், சுவாமிமலை, மதுரை, வாகைகுளம், கள்ளக்குறிச்சி, மகாபலிபுரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இங்கு ஐம்பொன் விளக்கு, கல் சிற்பங்கள், மரச் சிற்பங்கள், கலைத்தட்டுகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு, அனைத்து பூம்புகார் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஆயிரம் ஆயிரம் படைப்புகள்
மேலும், பல்லாயிரக்கணக்கான கைவினைஞர்களின் கலைப் பொருட்களான தஞ்சை ஓவியம், பொம்மைகள், கல், மரச் சிற்பங்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்கள் மற்றும் கோயில், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், அலங்காரப் பொருட்கள், ஊதுபத்தி உள்ளிட்ட பூஜை பொருட்கள், பல்வேறு உலோகத்திலான நகைகள் ஆகியவையும், பூம்புகார் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனைத் தொகையில் சுமார் 10 சதவீதம் பூம்புகார் நிறுவனத்துக்கும், மீதம் சம்பந்தப்பட்ட கைவினைக் கலைஞருக்கும் கிடைக்கும்.
மிக அழகியப் பொருட்களைத் தயாரித்த கலைஞர்களின் விவரங்களை தெரிந்துகொள்வது சிரமம். மேலும், வெளிநாடுகளில் உள்ளவர்கள், இந்தியாவின், குறிப்பாக தமிழக கைவினைஞர்களின் தயாரிப்புகளை அதிகம் விரும்பினாலும், அந்தந்த நாடுகளில் இருந்தபடியே அவற்றைப் பார்த்து, ஆர்டர் கொடுப்பதோ, சம்பந்தப்பட்ட கைவினைக் கலைஞர்களைத் தொடர்பு கொள் வதோ இயலாத காரியமாக இருந்தது.
இணையத்தில் களஞ்சியம்
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கைவினைஞர்களின் தகவல்களைத் திரட்டி, இணையதளத்தில் வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த மே மாதம் 12-ம் தேதி தமிழக கைவினைஞர்களுக்காக www.tnartisaan.com என்ற தகவல் களஞ்சிய இணையதளத்தை, தமிழக முதல்வர் தொடங்கிவைத்தார்.
தற்போது, கைவினைஞர்களின் முழு தகவல்களையும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் முயற்சியில், பூம்புகார் நிறுவனம் முழுமூச்சுடன் இறங்கியுள்ளது. இதற்காக கைவினைக் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
கைவினைஞர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள், படைப்பின் புகைப்படம், விவரம் உள்ளிட்டவை இணையதளத்தில் பதிவு செய்யப்படும். இதன் மூலம் கைவினைஞர்களின் உற்பத்திப் பொருட்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்யலாம்.
மேலும், மத்திய, மாநில அரசுகளின் மானியம், உதவித்தொகை மற்றும் சலுகைகளைப் பெறவும் இந்தப் பதிவு உதவியாக இருக்கும்.
இதுகுறித்து கோவையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் எம்.நரேந்திரபோஸ் ‘தி இந்து’விடம் கூறியதாவது: அனைத்து பூம்புகார் விற்பனை நிலையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, கைவினைஞர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய உதவுவதுடன், அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்படும்.
இதற்காக அவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண், படைப்பின் வண்ணப் புகைப்படம் எடுத்துவர வேண்டும். படைப்பின் புகைப்படம் இல்லாதவர்கள், படைப்பைக் கொண்டுவந்தால், அதைப் படமெடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT