Published : 17 Mar 2023 03:44 AM
Last Updated : 17 Mar 2023 03:44 AM
கிருஷ்ணகிரி: சூளகிரியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்கிற நீண்டக்கால கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதேபோல் சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படுகிறது. கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஓட்டியுள்ள சூளகிரி தாலுகா நாளுக்கு, நாள் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று வருகிறது.
உயிர், பொருட் சேதம்: இந்நிலையில் தொழிற்சாலைகள் ஏற்படும் திடீர் தீ விபத்துகளில், தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகள், கால்நடைகள் நீர்நிலைகளில் தவறி விழும் போது, தீயணைப்புத்துறையினர் கிருஷ்ணகிரி, ஓசூர், ராயக்கோட்டையில் இருந்து வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளில் உயிரிழப்புகளும், பொருட்சேதமும் அதிகளவு ஏற்படுவதால், சூளகிரியை மையமாக கொண்டு தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டக்காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சூளகிரி வளர்ச்சியை நோக்கி..: இதுகுறித்து சூளகிரியை சேர்ந்த நாகராஜ் மற்றும் சிலர் கூறும்போது, "ஓசூரை தொடர்ந்து தொழிற்சாலைகளின் வளர்ச்சி தற்போது சூளகிரியை மையமாக கொண்டுள்ளது. குறிப்பாக, இப்பகுதிகளில் கிரானைட், காகித தயாரிப்பு, ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட அதிகளவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகளில் எதிர்பாராமல் தீ விபத்து ஏற்பட்டால், கிருஷ்ணகிரியில் இருந்து 31 கி.மீ தூரத்தை கடந்தும், ஓசூரில் இருந்து 22 கி.மீ, ராயக்கோட்டையில் இருந்து 22 கி.மீ தூரத்தில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வர வேண்டும். நீண்ட தூரத்தில் இருந்து வருவதால் இழப்புகள் அதிகரிக்கிறது.
இதேபோல் கால்நடைகள் அடிக்கடி கிணறு, குட்டை, ஏரிகளில் தவறி விழும் போது, உடனடியாக மீட்க முடிவதில்லை. எனவே, சூளகிரியை மையமாக கொண்டு தீயணைப்பு நிலையம் தொடங்கிட வேண்டும் என்கிற நீண்டக்கால கோரிக்கையை மாவட்ட தீயணைப்புத்துறையினர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் தொழிற்சாலை, விவசாயம், வாகன ஓட்டிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றனர்.
இதுகுறித்து மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர்களிடம் கேட்ட போது, "சூளகிரியில் தீயணைப்பு நிலையம் தொடங்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் நிச்சயம் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT