Published : 16 Mar 2023 02:49 PM
Last Updated : 16 Mar 2023 02:49 PM

தருமபுரி: சத்தியநாராயணா முன்னிலையில் வர்ணனையில் ரஜினியை கலாய்த்த ஜல்லிக்கட்டு தொகுப்பாளர்

தருமபுரி அருகே சோகத்தூர் டிஎன்சி மைதானத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி.

தருமபுரி: தருமபுரியில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வளாகத்தில், நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணாவை வைத்துக்கொண்டே நிகழ்ச்சி தொகுப்பாளர் ரஜினிகாந்தை கலாய்த்து தள்ளியது கலகலப்பாகவும் சலசலப்பாகவும் அமைந்தது.

தருமபுரி அடுத்த சோகத்தூர் ஊராட்சியில் உள்ள ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி இன்று (வியாழன்) காலை முதல் சோகத்தூர் டிஎன்சி மைதானத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்து வருகிறது. வீரத்தமிழன் ஜல்லிக்கட்டு பேரவை என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்றுள்ளன. அதேபோல, 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவில் தருமபுரி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில், இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்கவும், நிகழ்ச்சியை காணவும், நடிகர் ரஜினிகாந்தின் சகோதரரான சத்தியநாராயணா கெய்க்வாட் இன்று தருமபுரி வந்திருந்தார். ஜல்லிக்கட்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் நீண்ட நேரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியையும் கண்டு ரசித்தார்.

இந்நிலையில், ரஜினியின் சகோதரரான சத்தியநாராயணாவை ஜல்லிக்கட்டு திடலில் வைத்துக்கொண்டே, நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்தை கலாய்த்துத் தள்ளினார். நிகழ்ச்சி தொகுப்புப் பணியில் ஈடுபடுவோர் வாடிவாசல் பகுதிக்கு மேற்புறமாக அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் இருந்தபடி நிகழ்ச்சி குறித்து வர்ணனையில் ஈடுபடுவது வழக்கம்.

இன்றைய நிகழ்ச்சியிலும் அவ்வாறே சிலர் சுழற்சி முறையில் நிகழ்ச்சித் தொகுப்பில் ஈடுபட்டனர். அவர்களில் ஒருவர் பேசும்போது, ''தோ வர்ரான்யா...பிடிச்சுப் பாரு...சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த கருப்பன் வர்ரான் பிடிச்சுப் பாரு... பிடிச்சுப் பாரு... ஆஹ்ஹா ஆஹ்ஹா ஆஹ்ஹா... பயலுவ கிட்டகூட நெருங்க முடியலடா... மாடு வெற்றி பெற்றது... மாட்டுக்காரங்க வந்து பரிசை வாங்கிக்கோங்க...'' என்ற ரீதியில் பேசிக் கொண்டிருந்தார்.

அந்த வரிசையில், செவலை காளை ஒன்று வாடிவாசலை நெருங்கியபோது, ''பார்வையிலேயே மிரட்டும் செவலைக் காளை வாராண்டா... வாராண்டா... வந்துட்டான்டா... தைரியமிருந்தா பயலுவ பிடிச்சுப் பாருங்க...'' என்று வர்ணனை கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால், அந்தக் காளை வாடிவாசலின் வெளியேறும் பகுதிக்கு அருகே வருவதும் பிறகு பின்னோக்கி சில எட்டுகள் வைப்பதும், தயங்கி நிற்பதுமாக சில நிமிடங்கள் கண்ணாமூச்சி காட்டியது.

இதைக் கண்ட அந்த தொகுப்பாளர் சளைக்காமல், ''செவலைக் காளை, தலைவர் ரஜினிகாந்த் மாதிரி. எப்ப வருவேன், எப்டி வருவேன்னு சொல்ல முடியாது. ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்னு தலைவர் ரஜினி சொல்லுற மாதிரியே தயங்கி தயங்கி நிற்குறாப்ள... ஆனாலும் இப்போ பாரு பாய்ஞ்சு வெளியில வரப் போறாப்ள... பயலுக உஷாரப்பா...'' என்று ரஜினிகாந்தை கலாய்த்தபடியே சரமாரியாக பேசிக் கொண்டிருந்தார்.

இந்தக் காட்சிகளை பார்த்தபடியும், தொகுப்பாளரின் இந்த வர்ணனையை கேட்டபடியும் நிகழ்ச்சி அரங்கில் அமர்ந்திருந்த சத்தியநாராயணா கெய்க்வாட், தொகுப்பாளர் ரஜினி குறித்து பேசியபோது புன்முறுவல் செய்தபடியே நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தார்.

அதேநேரம், நிகழ்ச்சிக்கு சத்தியநாராயணாவை அழைத்து வந்த ரஜினி மன்றத்தினரோ, தொகுப்பாளரை பார்த்து, ''உங்களுக்கு கலாய்க்க அவரை விட்டா வேறு ஆள் கிடைக்கலையா ராசா... டாபிக்கை மாத்துங்க..'' என்று புலம்பியபடி தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர். இதனால், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி அரங்கம் சற்று நேரம் கூடுதல் கலகலப்புடன் நகர்ந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x