Published : 16 Mar 2023 02:24 PM
Last Updated : 16 Mar 2023 02:24 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை புதிதாக உருவாக்கப்பட்டு அதற்கு ரூ. 530 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு: "ரமேஷ்(என்ஆர்.காங்): புதுச்சேரி அரசின் மூலம் விளையாட்டுக்கான தனி துறை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அதிகாரிகளை நியமித்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா?
முதல்வர் ரங்கசாமி: "அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரமேஷ்: விளையாட்டுத்துறைக்கு இயக்குனரே நியமிக்கப்படவில்லை. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலனையும் இணைத்து விளையாட்டுத்துறை உருவாக்கப்படுமா?
லட்சுமி காந்தன் (என்ஆர்.காங்): இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுக்க விளையாட்டு அவசியம். எனவே விளையாட்டுத்துறையை பலப்படுத்த வேண்டும்.
பாஸ்கர்(என்ஆர்.காங்): கொம்யூன் பஞ்சாயத்துதோறும் விளையாட்டு மைதானங்களை உருவாக்க வேண்டும். இளைஞர்கள் விளையாட முன்வந்தாலும் மைதானம் இல்லாத நிலைமை உள்ளது.
பிஆர்.சிவா (சுயே): கல்லூரி அளவில் இருந்த கஞ்சா பயன்பாடு தற்போது பள்ளி அளவில் வந்துவிட்டது. இதில் பாலின வித்தியாசமும் இல்லை.
முதல்வர் ரங்கசாமி: இளைஞர் நலன், விளையாட்டுத்துறையை தனியாக அரசு உருவாக்கியுள்ளது. பட்ஜெட்டில் இதற்கு ரூ. 530 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை முழுமையாக செலவிடுவோம். இத்துறை மூலம் பல திட்டங்களை கொண்டுவருவோம்.
அமைச்சர் நமச்சிவாயம்: கல்வித்துறையோடு இணைந்திருந்த விளையாட்டு துறையை பிரித்துள்ளோம். இத்துறையின் மூலம் விளையாட்டு மைதானங்களை உருவாக்குவது, பயிற்சியாளர்களை நியமிப்பது, புதிய விளையாட்டுக்கள் இடம்பெறச் செய்வது என அனைத்து பணிகளையும் செய்ய உள்ளோம். பயிற்சியாளர்களின் சம்பள முரண்பாடு களையப்படும். காலங்காலமாக இருந்து வரும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என தனி துறையை உருவாக்கியுள்ளோம்.
16 ஆண்டுகளாக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவில்லை. தற்போது ரூ.8 கோடி நிதி நிலுவை உள்ளது. விளையாட்டுக்கு அரசு தனி கவனம் செலுத்தும். மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டம் மூலமும் நிதி பெறப்பட்டு விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படும். காரைக்காலுக்கு விளையாட்டு கவுன்சில் அமையும். தனித்துறை உருவாக்க நிதித்துறை செயலரிடம் கோப்பு உள்ளது. அந்த ஒப்புதல் வந்தபிறகு அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT