Published : 16 Mar 2023 01:09 PM
Last Updated : 16 Mar 2023 01:09 PM
தருமபுரி: தருமபுரி அடுத்த சோகத்தூரில் கோயில் திருவிழாவையொட்டி இன்று தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 500 காளைகளும், 400 வீரர்களும் கலந்துகொண்டனர்.
சோகத்தூர் ஊராட்சி எ.ரெட்டிஅள்ளி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி 2ம் ஆண்டாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி இன்று (வியாழன்) காலை தொடங்கியது. நிகழ்ச்சியை தருமபுரி கோட்டாட்சியர் கீதாராணி தொடங்கி வைத்தார்.
முன்னதாக, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன் பின்னர் முதல் சுற்றுக்கு 100 காளைகள் களமிறக்கப்பட்டன. காளைகளை அடக்க 50 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல, 8 சுற்றுக்களாக நிகழ்ச்சி நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தொடக்க விழா: நிகழ்ச்சிக்கு பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினரும் பாமக கவுரவத் தலைவருமான ஜிகே மணி, தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிகட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகளும் 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் 6 வாகனங்கள், 30 மருத்துவ குழுக்கள் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடைபெறும் வளாகத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT