Published : 16 Mar 2023 01:17 PM
Last Updated : 16 Mar 2023 01:17 PM
சென்னை: தருமபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி உள்வட்டம், சிகரலஅள்ளி தரப்பு, நாகதாசம்பட்டி கிராமத்தில் இயங்கிவந்த தனியார் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் நாகதாசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் க/பெ.காவேரி (வயது 65) மற்றும் சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த பழனிம்மாள் க/பெ.பூபதி (வயது 50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மீட்புப்பணிகள் மற்றும் சிகிச்சை விபரங்கள் குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் மூலம் அறிந்தேன்.
மேலும், இவ்விபத்தில் கடுமையான காயமடைந்து பென்னாகரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவலிங்கத்திற்கு, த/பெ.பொன்னுமாலை (வயது 52) சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், கடும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிவலிங்கத்திற்கு ஒரு இலட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT