Published : 16 Mar 2023 01:02 PM
Last Updated : 16 Mar 2023 01:02 PM
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது தொடர்பாக மையம் வாரியாக ஆய்வு செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13ம் தேதி தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற மொழித் தேர்வை 50,000 பேர் எழுதவில்லை. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் இன்று (மார்ச். 16) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன்பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஏதனால் இவ்வளவு ஆப்சென்ட், கடந்த முறை இது போன்ற நிலை வந்தபோது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்யப்பட்டது. தேர்வு மையம் வாரியாக இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்த பிறகு, தேர்வுக்கு வராதவர்கள் தொடர்பான தகவலை எடுத்து அதற்கான காரணத்தை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரணத்தை கண்டறிவது தான் மிகவும் முக்கியமானது.
பெற்றோர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேர்வுக்கு வராதவர்களை நாங்கள் அழைக்க வரும் போது, பெற்றோர்கள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கவுன்சிலிங் வழங்கப்படும். மாவட்ட வாரியாக காரணத்தை ஆய்வு செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 24ம் தேதி பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆப்சென்ட் ஆன மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத வைக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த ஜூன் தேர்வில் இவர்கள் அனைவரும் தேர்வு எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தொடங்க உள்ள 10ம் வகுப்பு தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதினார்கள் என்ற நிலையை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT